`உருவம் உங்களுக்கு மறந்துபோச்சா' - அமைச்சர்களை விட்டுவைக்காத டி.ராஜேந்தர்

டி.ராஜேந்திரன்

தமிழக அமைச்சர்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.ராஜேந்தர்.

திருமண விழா  ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து கரூருக்குச் செல்ல,  விமானம் மூலம் திருச்சி வந்த லட்சிய திராவிட  முன்னேற்றக் கழகத் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''அரசியலுக்கு கமல்,  ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரலாம். நண்பர் கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் அரசியல் வருகையை எதிர்க்கவில்லை. அவர்களுக்கு ஆயிரம் கனவு உண்டு. அரசியலில் யாருக்கு அழிவு யாருக்கு சரிவு என்பதை காலம் தீர்மானிக்கும். இப்போதைக்குத் தேவை நெளிவு சுழிவு. ஜாதகம் யாருக்கு நல்லா இருக்கோ அவங்கதான் அடுத்த முதல்வராக முடியும். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

தற்போது அ.தி.மு.க  தலைமைச்செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை மாற்றுவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்பாக அ.தி.மு.க. அமைச்சர்களை மாற்ற வேண்டும். தற்போது நடைபெற்றுவருவது அம்மா ஆட்சியில்லை சும்மா ஆட்சி. அமைச்சர்கள் ஜெயலிதாவை இதய தெய்வம் அம்மா எனச் சொன்னால் போதுமா, அவர்கள் உருவம் உங்களுக்கு மறந்துபோச்சா. மத்திய அரசின் ஜி.எஸ்.டி, மீத்தேன் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால்,  அவர் ஆரம்பித்த திட்டத்தை அவரது பிறந்தநாளில் தொடங்கிவைக்க வந்த மோடியை வரவேற்க சென்னை முழுவதும், அ.தி.மு.க. மற்றும் அவர்கள் ஆளும் தமிழக அரசு சார்பில், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அத்திட்டத்தினை அறிவித்த ஜெயலலிதாவுக்கு பேனர்களே இல்லை. இவர்கள் கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுத்தவர் ஜெயலலிதா. இரட்டை இலையைக் கட்டிக்காத்தவர் அவர். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் அ.தி.மு.க-வின் இரட்டை தலை; விட்டால் நீங்க கட்சிக்கு வைப்பீங்க உலை. இப்போது ஆட்சியில் இருப்பவர்களால், தனியா நின்னு ஓட்டு வாங்க முடியுமா? இரட்டை இலை கிடைச்சிடுச்சுன்னு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிச்சாங்க. பிறகு ஏன் தோற்றீங்க. உதய சூரியனில் நின்ற தி.மு.கவும் காலி. இது யார் ஆட்சி பினாமி ஆட்சி.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்கு வருகைதந்த மோடி தமிழக அமைச்சர்களுக்கு அறிவுரை கூறினார். அவர் அறிவுரை கூறும் நிலையில்தான் தமிழக அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய இந்நிலையால்தான் ஜெயலலிதா மரணமடைந்தார். கடந்த காலங்களில் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்ததும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு லட்சிய திமுக ஆதரவு அளிக்கவில்லை என்பதால், அதற்கு முந்தைய  காலங்களில் நடைபெற்ற பல்வேறு அனைத்துக்கட்சிக் கூட்டங்களில் பங்கேற்ற லட்சிய திமுகவுக்கு, காவிரி பிரச்னைக்காக தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்காக, எனது  கண்டனத்தைத் தெரிவித்தேன். இவர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வைப்பது என்பது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்க முயல்வது போன்றது. எனது அரசியல் அடுத்த நகர்வுகளை முன்னிட்டு, நாளை காலை சென்னையில் முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளேன். மேலும், வரும் தேர்தலில் லட்சிய தி.மு.க யாருடன் கூட்டணி வைப்பது என்பதைவிட யாருடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு  எடுக்க உள்ளோம். அந்தக் கூட்டம் தமிழக மக்களின் நலனுக்கான முடிவாக இருக்கும்'' என்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் டி.டி.வி.தினகரன் பக்கம் செல்கிறார்களே என்ற கேள்விக்கு, நடப்பதே ஆட்சியில்லை. இவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

சிம்பு அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்திரன், 'சிம்பு அரசியலுக்கு வருவது குறித்து அவரே முடிவெடுப்பார்' என்று கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!