வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (27/02/2018)

கடைசி தொடர்பு:18:35 (27/02/2018)

தொடரும் மருத்துவ மாணவர்கள் மரணம் - சி.பி.ஐ விசாரணை கோரும் வைகோ!

சண்டிகரில் இறந்தது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். 

வைகோ

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவம் படித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது. அவரது மரணம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், "தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணடைந்து வருகின்றனர். திருப்பூர் சரவணன், அவரைத் தொடர்ந்து சரத்பிரபு ஆகியோர் தகுதி அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வந்தநிலையில், அவர்களது மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே பின்னணியில், தற்போது மாணவர் கிருஷ்ண பிரசாத் மரணமும் நிகழ்ந்துள்ளது. இறந்துபோன கிருஷ்ணபிரசாத், ஒருவாரத்துக்கு முன்னர்தான் தனது பெற்றோரிடம் இந்தியில் பேசுவது சிரமமாக உள்ளதாகக் கூறியிருக்கிறார். இவரது மரணம் இயற்கையாக நடைபெறவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. டெல்லியில் மருத்துவக்கல்வி பயில்கின்ற தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும் கவலையும் உண்டாகியுள்ளன. எனவே, இந்த மூன்று மாணவர்களின் உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க