“மாடுகளுக்கும் இயற்கை வைத்தியம் செய்யலாம்..!” - விவசாயிகள் கூட்டத்தில் டாக்டரின் அறிவுரை | Organic farmers meeting happened in madurantakam, Kancheepuram

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (27/02/2018)

கடைசி தொடர்பு:16:43 (27/02/2018)

“மாடுகளுக்கும் இயற்கை வைத்தியம் செய்யலாம்..!” - விவசாயிகள் கூட்டத்தில் டாக்டரின் அறிவுரை

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கடுகுப்பட்டு கிராமத்தில் கரிம விவசாயிகள் கட்டமைப்பின் 18 ம் ஆண்டுவிழா மற்றும் இயற்கை வேளாண் இடுபொருள் நேரடித் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. இயற்கை விவசாயி சுப்பு என்பவரின் தோட்டத்தில், டாக்டர் அரு. சோலையப்பன் தலைமையில் நடந்த விழாவில், இயற்கை விவசாயிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்.

கரிம விவசாயிகள் கட்டமைப்பு ஆண்டு விழா

துவக்க உரையாற்றிய டாக்டர் அரு.சோலையப்பன், “பத்துவருடத்திற்கும் மேல் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்களுக்குச் சோர்வும், விரக்தியும் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் விவசாயத்தை நோக்கி வரத்தொடங்கிவிட்டார்கள். ‘வேலையை விடக் கூடாது. முதலில் பகுதி நேர விவசாயியாக மாறுங்கள். வாரம் ஒரு முறை வந்து விவசாயம் செய்ய வேண்டும். விவசாயம் பார்த்து பழகிய பின்னர் உங்களுக்கு முழுவதுமாக ஒத்துவந்தால் வேலையை விட்டுவிடுங்கள். இல்லையென்றால், வேலையைத் தொடருங்கள்’ என்று அவர்களிடம் அறிவுறுத்துவேன்.” என்றார்.

அடுத்து பேசிய கால்நடைத்துறை பேராசிரியர் டாக்டர் குமாரவேல், “கால்நடைப் பல்கலைக் கழகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, புதிய தொழில் நுட்பங்களைக் கொடுக்க முடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறோம். இயற்கை விவசாயத்திற்குக் கால்நடைகள் அவசியம். இதனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளிடம் தொடர்ந்து பேசிவருகிறோம். இதில் நாட்டு மாடுகள், ஆடு, நாட்டுக் கோழிகளை வளர்க்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலிக்குளம் போன்ற நாட்டு மாடுகளை விவசாயிகள் வாங்கிக் கொடுக்கக் கேட்கிறார்கள். அந்தந்த இடத்திற்கேற்ப மாடுகளை நாம் பராமரிக்க வேண்டும். இன்றைக்கு அதன் விலைகள் மிகவும் அதிகமாகி விட்டது. நாற்பதாயிரம் விற்றுக்கொண்டிருந்த மாடுகள் தற்போது ஒரு லட்சம் வரை விற்கின்றது. நாட்டு மாடு, கிடாரிகளை வளர்த்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மாடுகளைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன. பத்து ஊசி போட்ட பிறகும் கரு தங்கவில்லை எனவும், மடிகட்டிவிடுவதால் சரியாகப் பால் சுரக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பயிற்சி முகாம்

மடிகட்டல்

மடிகட்டல் நோய்க்கு இயற்கை சார்ந்த மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும். மடிவீக்க நோய் காரணமாக இந்தியா முழுவதும் ஆண்டிற்கு 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என ஒரு சர்வே தெரிவிக்கிறது. ஒரு மடல் சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் கலந்து ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு முறை என ஏழு முறை மடியில் தடவ வேண்டும். இப்படித் தொடர்ந்து ஐந்து நாள்கள் செய்தால் மடிவீக்க நோய் குணமாகும்.

ஏ1, ஏ2 ரகங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதுபோல் ஏ1, ஏ2 என இரண்டு வகையான பால் ரகங்கள் இன்று இருக்கிறது. நாட்டு ரகங்கள் ஏ1 பால் எனவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலப்பின மாடுகள் ஏ2 எனவும் அழைக்கிறோம். சில இடங்களில் ஏ1, ஏ2 இரண்டையும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வேளாண் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆராய்ச்சியின் மூலமாக ஒரு ஸ்ரிப் தயாரித்திருக்கிறோம். அதில் ஒரு சொட்டுப் பாலை விட்டு அதை எடுத்துவந்து எங்களிடம் கொடுத்தால், அது எவ்வகையான பால் என்பதைச் சொல்லிவிடுவோம். அதுபோல் காளைகளையும் சோதிக்க முடியும். காளையில் காதின் ஓரம் லேசாகக் கீறினால் வரும் ரத்தத்தை இந்த ஸ்ரிப்பில் ஒரு சொட்டு விட்டு எடுத்து வந்தால், ஏ1 காளையா, ஏ2 காளையா எனக் கண்டுபிடித்து சொல்லிவிடுவோம். அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் இன்று எளிமையாகிவிட்டது.

கரிம விவசாயிகள் கட்டமைப்பு ஆண்டு விழா

பயோ கார்பன்

அதைத்தொடர்ந்து பயோகார்பன் பற்றி பேசினார் டாக்டர் ரவிச்சந்திரன். “நாம் ஏற்கெனவே நிலத்திற்கு நிறைய உப்புப் போட்டு நிலத்தின் தன்மையை மாற்றிவிட்டோம். உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல இரசாயன உப்பை மண்ணில் போடுவதால் விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஓர் ஏக்கர் நெல் விளைவதற்கு ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதும். ஆனால், இந்தியாவில் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆர்கானிக் கார்பன் அதிகமாக இருந்தால்தான் நீங்கள் போடும் ஊட்டச்சத்து பயிருக்குக் கிடைக்கும். தேங்காய் மட்டை, உள்ளிட்ட தாவரக்கழிவுகளிலிருந்து மூட்டம் போட்டு எரித்து, அந்தக் கரியை எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம். இந்தக் கார்பனை உயிரியல் கார்பன் என்று அழைக்கிறோம். முக்கியமாக வறட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த முறை அவசியம் தேவைப்படும். பயோ கார்பன் நிலத்தில் ஈரப்பதத்தைக் கூட்டும். ஒரு கிராம் கார்பன் மூன்று கிராம் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும். இதனால் நுண்ணுயிர் பெருக்கம் அதிக அளவில் நடைபெறும். செடிகளுக்குத் தேவையான சத்துகள் எளிதில் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு முறை போட்டால் போதும். பயோ கார்பனை உபயோகிக்கும் போது 5 லிருந்து 8 சதவிகித விளைச்சல் அதிக அளவு கிடைக்கிறது. ஓர் ஏக்கருக்கு இரண்டரை டன்னிலிருந்து ஐந்தரை டன் வரை பயோ கார்பனை பயன்படுத்தலாம். அதற்கு முன்பு நிலத்தின் அமிலகார சமநிலையை (pH) தெரிந்து கொள்ள வேண்டும். பயோ கார்பன் ஊட்டச்சத்து கிடையாது. உரத்துடன் கலந்து போட வேண்டும். இதனால் நிலத்தின் வளம் கூடும்.” என்றார்.

விவசாயிகளும் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்கள் தீர்த்து வைத்தார்கள். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்