`மிகவும் அமைதியானவர்' - மதுவுக்கு நடந்த கொடுமையை விளக்கும் ஷிவானி

பசியாறச் சென்ற வனமகனுக்கு, கடவுளின் தேசம் மரணத்தை பரிசாக வழங்கியுள்ளது. மது என்ற 27 வயது இளைஞர், மற்ற மனிதர்களைப் போல சராசரி மனிதர் இல்லை. அதனால்தான் வனமகனாக, வனத்திலேயே வலம் வந்தார். மதுவின் மரணம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில், மதுவின் மலை கிராமத்தின் அவல நிலை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மது

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி என்ற கிராமம் உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 193 பழங்குடி கிராமங்கள் உள்ளன. அதில் கடுகுமன்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மது. மது மட்டுமல்ல, இங்கு வாழும் அனைத்துப் பழங்குடி மக்களுமே அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தாய்க்குல சங்கத்தைச் சேர்ந்த ஷிவானி கூறுகையில், "மது மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகமாகப் Shivaniபேசமாட்டார். வனப்பகுதியிலிருந்து, முக்காலிக்கு வரும்வரை அவரைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையுமே மது ஒரு வார்த்தைகூட திட்டவில்லை. மாறாக அழுதுகொண்டே இருந்துள்ளார். முழுக்க முழுக்க நாட்டுக்காரர்கள் (பழங்குடி மக்கள் அல்லாதோர்) சேர்ந்து நடத்திய தாக்குதல் இது. அவரது முட்டி கை, கால், என அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். நாங்கள் போராட்டத்தில் இறங்கியதால், தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இல்லையென்றால், பழங்குடி மக்கள் கொடுக்கும் புகார்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காது.

இந்த ஊரில் யார் திருடினாலும் மது மீதுதான் பழி போடுவார்கள். ஏனென்றால் அவர்தான், யாரையும் திருப்பிக் கேட்க மாட்டார். மது மீது தவறான எண்ணம் பதிய, தற்போது குற்றவாளிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போலியான வீடியோக்களை தயாரித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்துக் கிராமங்களிலும் பழங்குடி மக்கள் அடிமையாகத்தான் இருக்கின்றனர். பழங்குடி மக்களுக்காக, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அவை எதுவுமே முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. உண்மை நிலவரத்தை இங்கே வந்து பார்த்தால்தான் தெரியும்" என்றார்.

பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த பாபு ராஜ் கூறுகையில், "பழங்குடி மக்களின் வாழ்வாதாரமே மாற்றப்பட்டுள்ளது. முன்பு நாங்கள் சாப்பிட்ட உணவு யாவும் இப்போது கிடைப்பதில்லை. இங்குள்ள ரேஷன் கடைகள் எல்லாமே பெயரளவிலேயே இயங்குகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை, மளிகை கடைகளுக்கு விற்றுவிடுகின்றனர். இதனால், அதே அரிசியை அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படியே போனால், பழங்குடி மக்கள் எதைத்தான் சாப்பிடுவது" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!