ஒருபுறம் ஆய்வு; மறுபுறம் அதிரடி! கலக்கும் தேனி கலெக்டர் பல்லவி

தேனி மாவட்டத்தின் புதிய மற்றும் முதல் பெண் கலெக்டராகப் பொறுப்பேற்றிருக்கும் பல்லவி பல்தேவ், இன்று காலை மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். முதலில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற கலெக்டர், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று மாணவ- மாணவிகளின், வாசிப்புத்திறன் குறித்து அவர்களிடம் நேரடியாகக் கலந்துரையாடினார். தொடர்ந்து, கழிப்பிட வசதி, நூலக வசதி, சத்துணவுக்கூடம், குடிநீர் வசதி, வளாக சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், அருகில் இருந்த அங்கன்வாடி மையத்துக்குச் சென்று குழந்தைகளுக்கு வழக்கப்படும் ஊட்டச்சத்து மாவு, பயர் வகைகள், விளையாட்டுப் பொருள்கள் குறித்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அல்லிநகரத்தில் உள்ள `கொண்டுராஜா பள்ளி’ அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பைப் பார்வையிட்டு அடைப்பை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் பல்லவி

இந்த நேரத்தில், ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோயில் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அதிகாரிகளைச் சம்பவ இடத்துக்கு அனுப்பினார் கலெக்டர் அங்கே விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிகள் கைப்பற்றப்பட்டன. மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருபுறம் திடீர் ஆய்வு, மறுபுறம் அதிரடி நடவடிக்கைகள் என இறங்கியிருக்கும் புதிய கலெக்டர் அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறார் என்று தெரியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனராம் மாவட்ட அதிகாரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!