வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (27/02/2018)

கடைசி தொடர்பு:18:55 (27/02/2018)

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம்!

நாகை அருகே நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  

சந்தனக்கூடு ஊர்வலம்

நாகை மாவட்டம், நாகூரில் உலகப் பிரசித்திபெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தத் தர்காவில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 461 வது கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்தபோது, இருபுறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்தனர்.  பாரம்பர்ய முறைதாரர் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனக் குடத்தை இன்று அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதி அறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிபு துவா செய்து ஆண்டவர் சமாதிக்குச் சந்தனம் பூசினார். இவ்விழாவின் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திருக்கிறது. நாளை (பிப்ரவரி 28 ம் தேதி) கடல் கரைக்குப் பீர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 2 ம் தேதி புனிதக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.  

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மாவட்ட எஸ்.பி. சேகர் தேஷ்முக் தலைமையில் 1200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  சந்தனக்கூடு விழா இனிதே நிறைவடைந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க