விண்ணப்பித்த 10 நாளில் பாஸ்போர்ட்! மதுரை மண்டல அலுவலர் தகவல்

மக்கள் எளிதாகப் பாஸ்போர்ட் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் 11 மாவட்டத் தலைநகரங்களில் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் 'பாஸ்போர்ட் சேவா கேந்ரா' தொடங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகரில் பாஸ்போர்ட் சேவா மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைக்குச் செல்ல, உயர் கல்விக்கு, சுற்றிப் பார்க்கச் செல்ல பாஸ்போர்ட் அவசியம். ஆரம்ப காலங்களில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்திருக்கும் நகரத்துக்கு பல மாவட்டத்தினரும் அலைந்து கொண்டிருக்க வேண்டிய நிலை. அல்லது ஏஜென்டுகளிடம் அதிகமாகப் பணம் கொடுத்துப் பெற வேண்டிய நிலை இருந்தது. சமீப காலமாக அந்தப் பிரச்னை இல்லை. தமிழகத்தில் நான்கு நகரங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நேரத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் பாஸ்போர்ட் மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 

மக்கள் பாஸ்போர்ட்

விருதுநகரில் `போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்ரா'வை, ராதாகிருஷ்ணன் எம்.பி தொடங்கி வைத்தார். தென்மண்டல அஞ்சலக இயக்குநர் பவன்குமார்சிங்குடன், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நாடு முழுவதும் 231 இடங்களில் போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்ரா தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது மையமாக விருதுநகரில் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தினமும் 50 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மதுரை மண்டல மையத்தில் பிரின்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரருக்கு 10 அல்லது 12 நாள்களில் கிடைக்கும்படி செய்யப்படும். மக்களுக்கு அருகிலேயே சேவை கிடைக்க வேண்டும் என்ற  மத்திய அரசின் கொள்கைபடி இந்தப் பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாகச் செயல்படும். நாளை நாகர்கோயிலிலும் தொடர்ந்து ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கையிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!