விமரிசையாக நடைபெற்ற கும்பகோணம் ஐந்து தேரோட்டம்!

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் ஐந்து தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெருவிழா மகாமகக் குளத்தில் நடைபெறுவதால் மகாமக நகரம் என்றும், பாஸ்கர சேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. இந்நகரில் மகாமகம் தொடர்புடையதாக 12 சிவன்கோயில்களும் 5 வைணவ தலங்களும் திகழ்கின்றன. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் உலகிலேயே முதன்முதலாகத் தோன்றியதாக மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. 

இக்கோயிலை முதன்மையாகக் கொண்டே ஆண்டுதோறும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமகப் பெருவிழாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவும் நடைபெறுகிறது. அதன்படி, மாசிமகப் பெருவிழா கடந்த 20-ம் தேதி 10 நாள் உற்சவமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவான எட்டாம் திருநாள் தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும் அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டமும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!