காலதாமதப்படுத்தும் காவல்துறை... பறிபோகும் வேலைவாய்ப்புகள் - குமுறும் இளைஞர்கள் 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

 சென்னை போலீஸார், சான்றிதழ் வழங்க காலதாமதத்தால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னை மாநகர காவல்துறையில், போலீஸ் கிளியனரஸ் சான்றிதழ் (பி.சி.சி) மற்றும் ஜாப் வெரிபிஃகேஷன் சான்றிதழ் ஆகியவை தேவைப்படுவோர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழைப் பெறலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற விண்ணப்பிப்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காலதாமதமாகச் சான்றிதழ் வழங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 இதுகுறித்து பி.சி.சி சான்றிதழுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காத காரணத்தால் வேலைவாய்ப்பை இழந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல விண்ணப்பித்திருந்தேன். பி.சி.சி சான்றிதழுக்காகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், 60 நாளுக்குப் பிறகு அந்தச் சான்றிதழ் என் கையில் கிடைத்தது. இதனால், நல்ல நிறுவனத்தில் எனக்கு கிடைத்த வேலை பறிபோய்விட்டது" என்றார். 

 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "வேலைப்பளு காரணமாகவே சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சான்றிதழுக்கு விண்ணப்பித்த 10 முதல் 15 தினங்களுக்குள் அதைக் கொடுக்க வேண்டும். ஆனால், நீதிமன்றம் உள்ளிட்ட சில அலுவலுக்காக வெளியில் செல்ல வேண்டியதுள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்தச் சான்றிதழ் வழங்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு, லோக்கல் போலீஸ் நிலையம் என மூன்று பிரிவின் பங்களிப்பு உள்ளதால் எதாவது ஒரு இடத்தில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது என்றனர். 

 பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்காகச் சான்றிதழ் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!