`வார்டு செயலாளரால் என் உயிருக்கு ஆபத்து' - சேலம் கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

பெண் பாரதி

``சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 44 வது வார்டு முன்னாள் செயலாளர் பழனிசாமியால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழனிசாமி அரசியல் செல்வாக்கு மிக்கவர். தினந்தோறும் அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பழனிசாமிதான் பொறுப்பு'' என்று பாரதி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்து கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

இதுபற்றி பாரதி, ''நான் எங்க அப்பா அம்மா கூட கிச்சிபாளையத்தில் வசித்து வந்தேன். எனக்கு 16 வயது இருக்கும்போதே எங்க பக்கத்து தெருவைச் சேர்ந்த பழனிசாமியோடு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக நேசித்து வந்தோம். பிறகு இரு வீட்டுக்கும் தெரியாமல் சேலம் கந்தாசிரமத்தில் திருமணம் செய்துகொண்டோம். பிறகு இருவர் வீட்டுக்கும் தெரிந்து எங்களைப் பிரித்து விட்டார்கள். அதன் பிறகு பழனிசாமி மேகலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எங்க வீட்டில் எனக்கு ஓமலூரைச் சேர்ந்த சக்திவேலோடு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நானும் சக்திவேலும் 3 மாதம்கூட வாழவில்லை. பழனிசாமி எங்க வீட்டுக்கு அடியாட்களோடு வந்து என் கணவரையும் அவுங்க அப்பா அம்மாவையும் மிரட்டி என்னைத் தூக்கிட்டு வந்துவிட்டார்.

அதன் பிறகு, 18 வருடமாக நான் பழனிசாமியோடு கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்கு அஜய், பிரபாகரன் என்ற இரண்டு பிள்ளைகள்  இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போட்டுக் கொடு என்று பிரச்னை செய்கிறார். என்னையும் எங்க அப்பா அம்மாவையும் அடிக்கிறார். எங்க அப்பாவை அடித்து காலை ஒடித்து விட்டார். பழனிசாமி, அடியாட்களோடு தினந்தோறும் மிரட்டுகிறார். அவர் 44 வார்டு செயலாளராக இருந்தவர். அரசியல் செல்வாக்கு உடையவர். எனக்கும் என் குழந்தைகள், குடும்பத்துக்கும் பழனிசாமியால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பழனிசாமிதான் பொறுப்பு'' என்றார்.

இதுபற்றி பழனிசாமியிடம் பேசியபோது, ''அந்தப் பொண்ணை திருமணத்துக்கு முன்பு காதலித்தது உண்மை. திருமணம் முடிந்த பிறகு அவுங்க புருஷனோடு 10 வருடம் வாழ்ந்துவிட்டு அவரோடு இருக்காமல் இரண்டு குழந்தைகளையும் கூட்டிட்டு வந்துவிட்டார். பிறகு நான் எதார்த்தமாகச் சந்தித்தபோது முன்னாள் காதலி என்று சில உதவிகள் செய்தேன். தற்போது என் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!