வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (27/02/2018)

கடைசி தொடர்பு:19:29 (27/02/2018)

"கூட்டணி பற்றி பி.ஜே.பி. இப்போதே சொல்லத்தேவையில்லை- தமிழிசை!

தமிழிசை சவுந்தரராஜன்

மிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சற்றே மந்தமாக இருந்த அரசியல் களம், தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். ரஜினியின் கட்சிப் பெயர், கொடி பற்றிய விவரம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உள்ளது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், 'முதல்வர் பதவியை தனக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால், எடப்பாடி தரப்பு அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் பரவலாக அரசியல்வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில்தான், பிரதமர் மோடி சென்னை வந்து சென்றுள்ளார். அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக அரசின் நலத்திட்டமான மானிய விலையில் 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழக நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்ததுடன், ஒருசில வாக்கியங்களை தமிழில் பேசி அசத்தினார் பிரதமர். 

மோடி - எடப்பாடி பழனிசாமி"அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை, பிரதமர் தொடங்கி வைத்து பெருமை சேர்த்துள்ளார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புளகாங்கிதத்துடன் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், பிப்ரவரி 24-ம் தேதியன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார் பிரதமர். அவரை, மாநில மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சந்தித்துப் பேசினார். அரசியல் வட்டாரத்தில் இது மிகப்பெரும் சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையேயான கருத்துவேறுபாடு குறித்து, தங்கமணி பிரதமரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

தமிழக அரசின் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் வந்தாரா அல்லது அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசலைத் தீர்த்துவைக்க வந்திருந்தாரா என்று சந்தேகிக்கும் அளவுக்குப் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. 

இதுபோன்ற அரசியல் பரபரப்புக்கு இடையே பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்களின் பி.ஜே.பி. கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா?, பி.ஜே.பி-யின் வாக்கு வங்கி, கமல், ரஜினி வருகையால் பாதிக்கப்படுமா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பினோம்.

அதற்குப் பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "தமிழகத்தில், கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 3 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலை தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் புறக்கணித்தாலும், பி.ஜே.பி. அந்தத் தேர்தலில் போட்டியிட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மேயர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.-வை எதிர்த்துப் போட்டியிட்டு பி.ஜே.பி. கணிசமான வாக்குகளைப் பெற்றது. கோவையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளும், தூத்துக்குடியில் 28 ஆயிரம் வாக்குகளும் வாங்கினோம். திருநெல்வேலி மேயர் வேட்பாளரைத்தான் அப்போது விலைக்கு வாங்கிவிட்டனர். ராமநாதபுரம் நகராட்சியில் 21 ஆயிரம் வாக்குகள் வாங்கினோம். 

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டோம். எனவே, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இப்போதைக்குக் கூட்டணி பற்றி பி,ஜே.பி. எந்த முடிவையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில், அப்போதுள்ள அரசியல் சூழலைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். எந்த முடிவானாலும் கட்சியின் மேலிடத்துடன் கலந்துபேசி எடுப்போம். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறது. 

கமல், ரஜினியின் அரசியல் வருகை பி.ஜே.பி-க்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்கிறீர்கள். ரஜினி இன்னும் அரசியலுக்கு முறைப்படி வரவில்லை. 'அவர்கள் இருவரும் நடை போடட்டும்; அதன்பின் நான் எடை போடுகிறேன்' என்று ஏற்கெனவே நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். கமல்ஹாசனோ கட்சி தொடங்கி, இப்போதுதான் ஆரம்பப்புள்ளியில் நிற்கிறார். இவர்களின் அரசியல் பிரவேசம் பி.ஜே.பி-க்கு எந்தப் பாதகத்தையும் ஏற்படுத்தாது. வெறும் கணிப்புகளை மட்டும் வைத்து நான் இப்போது எதுவும் சொல்லமுடியாது. 
கமலைப் பொறுத்தவரை அரசியல்வாதியாக கையெழுத்துப் போடுகிறார். அவரின் கட்சிக் கொடியை ஏற்றியுள்ளார். கட்சியைப் பதிவு செய்துள்ளார். என்றாலும், கமலின் செயல்பாடுகளை நான் அரசியல் களமாகவே பார்க்கவில்லை. ஏனென்றால், அது வெறும் காகிதப் பேப்பரின் சத்தம்  போன்றதுதான். அது, அப்படியே போய்விடும். தமிழகம் என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த களம். எனவே, கமல், ரஜினி வருகையால் பி.ஜே.பி. உள்பட மற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று நான் கருதவில்லை. மக்கள் அவர்கள் இருவரின் கட்சிகளையும் அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்க மாட்டார்கள். எனவே, அந்தந்த கட்சிகளுக்கான ஒருங்கிணைந்த வாக்குகள் எப்போதும் அந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும். கமலைப் பொறுத்தவரை தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்