வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (27/02/2018)

கடைசி தொடர்பு:19:51 (27/02/2018)

“ஊர்த்தலைவர் சிம்ரன்னு பேரு வெச்சார்... ஊர்க்காரங்க ரசிகர் மன்றம் வெச்சாங்க!” 'ஸ்ரீபாட்' சிம்ரனின் கதை

ப்போ எனக்கு ஏழு வயசு இருக்கும். என் அம்மா அமுதாவுக்கு என்னை அலங்காரம் பண்ணிப் பார்க்குறதில் அவ்வளவு ஆர்வம். அவங்க ஒரு நாடகக் கலைஞர். கட்டபொம்மன் நாடகத்தில், வெள்ளையம்மா வேஷம் போட்டவங்க. தன்னை அலங்கரிச்சுக்கும்போதெல்லாம் எனக்கும் மேக்கப் பண்ணிவிடுவாங்க. கண்ணுக்கு மை போட்டு, கன்னத்தில் ரோஸ் பவுடர் தூவி சிங்காரிச்சா வானத்திலிருந்து குதிச்ச ரம்பை மாதிரி இருப்பேனாம். 'உம் பொண்ணுக்கு மேக்கப் போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வெச்சுக்காதே ஆத்தா. காலா காலத்துல இந்த அழகியை மேடையில ஏத்து'னு பலரும் சொல்ல, ஏழு வயசுலயே மேடை ஏறிட்டேன்” - வெட்கம் ததும்பும் புன்னகையுடன் பேசுகிறார் அழகேஸ்வரி. 

சிம்ரன்

திண்டுக்கல் அருகேயுள்ள கொளுஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர், அழகேஸ்வரி என்கிற சிம்ரன். திண்டுக்கல், மதுரை, காரைக்குடி சுற்று வட்டார கிராம மக்களுக்கு சிம்ரன் ரொம்பவே பரிட்சயம். ஊர்த் திருவிழா, கிராமியக் கலை நிகழ்ச்சி எதுவானாலும் திண்டுக்கல் சிம்ரனின் பபூன் நிகழ்ச்சி இல்லாமல் நிறைவுபெறாது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பல வாலிபர் சங்கங்கள், ஸ்ரீபாட் என்றாலோ பபூன் டான்ஸ் என்றாலோ, லண்டன் புகழ் சிம்ரன் வந்தால்தான் திருவிழாவை நடத்தவிடுவோம் எனக் கொடி பிடிப்பார்கள். 

“நான் பொறந்தது வளர்ந்தது திண்டுக்கல்லுதான். நான் எப்போ பெரிய மனுஷியாகி மேடைக்கு வந்தேனோ, அப்போவே என் அம்மா நாடகத்திலிருந்து விலகிட்டாங்க. அவங்க காலத்துல நாடகத்துக்குப் பெரிய மரியாதை இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு. நாடகம் பார்க்க வர்றவங்களும் ஆபாசத்தை கேட்கறாங்க. என் அம்மா, என்னை ஆபாசமா நடிக்கக் கூடாதுன்னு சொல்லி வளர்த்துட்டாங்க. சின்ன வயசிலிருந்தே ஸ்ரீபாட்டா (வள்ளி) நடிச்சதால எனக்கும் ஆபாசமா நடிக்க தோணவே இல்லை. அதுதான் பெண்கள் மத்தியிலயும் குழந்தைகளிடமும் இப்போ வரை என்னை மரியாதையான இடத்துல தக்கவெச்சிருக்கு. 

எங்களுக்கு ஆர்டருங்க வர்றதே சித்திரை, வைகாசியிலதான். பங்குனி உத்திரத்தப்போ முருகன் கோவில்களில் வள்ளி நாடகத்துக்கு அழைப்பு வரும். அதுவும் பாரம்பரியமா நடத்தும் நாடகத்தை நிறுத்திட்டா ஊர்க் குத்தம் ஆகிடுமேன்னு நாடகம் நடத்துறாங்க. அப்போதான் நாங்க காசு சம்பாதிக்க முடியும். மற்ற நாள்களில் வருமானமும் இருக்காது. வேற வேலைக்கும் போக முடியாது. வீட்டிலிருந்தே டிரெஸ் தைக்கிறது, அதுல ஜிமிக்கி, மணி வெச்சு அழகுபடுத்துறது, நாடகத்துக்கு ரிகர்சல் பண்றதுன்னு நாள்களை ஓட்டுவோம்” என்கிறார். அழகேஸ்வரியா இருந்தவர் சிம்ரனா மாறியது பற்றிச் சொல்லும்போது,  

சிம்ரனின் குடும்பம்

“அது ரொம்பவே சுவாரஸ்யமான சம்பவம். ஒருமுறை திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல நாடகம். அந்த ஊருல ஆடலரசி சிம்ரனின் நாடகம் நடைபெறவுள்ளதுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தாங்க. எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரே குழப்பம். விசாரிச்சதுல எங்க நாடகக் குழுவுல உள்ளவங்கதான் 'நீ பார்க்க சிம்ரன் மாதிரியே இருக்கே. அதான் அந்தப் பேரை வெச்சிட்டோம்'னு சொன்னாங்க. அப்போ, சிம்ரன் பீக்ல இருந்த டைம். எனக்கும் அவங்களைப் பிடிக்கும். என் 16 வயசுல கமுதி பக்கத்துல நாடகம் நடிக்கப் போயிருந்தேன். ஊருக்குள்ள காலடி எடுத்துவெச்சதும் ஊர்த் தலைவருக்குப் பொம்பளைப் புள்ளை பொறந்துடுச்சு. 'நீ வந்த ராசி'னு சொல்லி, அந்தக் குழந்தைக்கு சிம்ரன்னு பேரு வெச்சார். அந்த ஊருல உள்ளவங்க எனக்காக ரசிகர் மன்றத்தையே ஆரம்பிச்சுட்டாங்க. அதிலிருந்து அழகேஸ்வரி மாறி, சிம்ரன் நிலைச்சிருச்சு” என்றவர், 'லண்டன் புகழ்' சீக்ரெட் பகிர்கிறார். 

“என் வீட்டுக்காரர் தாமோதரன், சினிமா ப்ரொடியூசரா இருந்தார். வெளிவராத ஒரு படத்தில் ஹீரோயின் தோழியா நடிச்சேன். அப்போதான் நானும் அவரும் காதலிச்சோம். ரெண்டு வருஷ லவ். வீட்டிலும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. கல்யாணம் முடிஞ்ச கையோடு லண்டன் போயிட்டோம். ஆனா, எனக்கு அந்த ஊரு செட் ஆகலை. எம் மனசு முழுக்க நாடகத்து மேலே இருந்துச்சு. நாலு வருசம் அங்கே தாக்குப் புடிச்சுட்டு, அவர்கிட்ட வெளிப்படையா சொன்னேன். 'உனக்கு எது புடிச்சிருக்கோ அதையே செய்'னு இந்தியாவுக்குக் கூட்டிட்டு வந்தார். கல்யாணத்துக்கு முன்னாடி வரை என் நாடகத்தை பாத்தவர்தான் அவர். ஊருல எனக்கிருக்கும் மவுசு நல்லாவே தெரியும். 'பாடின வாயும் ஆடின காலும் சும்மா இருக்காது'ன்னு சொல்வாங்க இல்லையா. அதுமாதிரி வாழ்ந்தா கடைசி வரை நாடகக்காரியா வாழணும்னு முடிவுப்பண்ணினேன். என் ஆசைக்கு உயிர் கொடுத்தது என் வீட்டுக்காரர்தான். இப்போ அவர் மட்டும் லண்டனில் இருக்கார். நான் இங்கே ரெண்டு பசங்களையும் பார்த்துக்கிட்டு அம்மாவோடு இருக்கேன். லண்டன் புகழ் பேரும் வந்துச்சு'' எனத் தொடர்கிறார். 

டம்ளர் வித்தை காட்டும் சிம்ரன்

''நான் தொடர்ந்து புராணக் கதைகளில் நடிக்கிறதுனால் ஆபாசமா நடிக்க மாட்டேன். பலரும் வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்த பொண்ணு அரையும் குறையுமா ஆடும்னு நினைக்கிறாங்க. அதோடு, எங்க நாடகத்துக்கு முந்தைய நிகழ்ச்சியா ஆடலும் பாடலும் நடத்தியிருப்பாங்க. அவங்களை மாதிரியே நீங்களும் ஆடமாட்டீங்களான்னு கூட்டத்துல கேட்பாங்க. அந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்குற மாதிரி பாம்பு டான்ஸ், பபூன் டான்ஸ் ஆடுறது, குட்டிக்கரணம் ஆடிக்குறது, வாயில மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு விடுறதுன்னு ஆடியன்ஸை திசை திருப்பிடுவோம். பபூன் டான்ஸ்னாலே ஆபாசம், டூயட் கண்டிப்பா இருக்கும். ஆனா, நான் ஆபாசமா பண்றதில்லே. அதுக்குப் பதிலா, அப்துல் கலாம் ஐயாவின் சிந்தனைகளை எடுத்துச் சொல்வேன். அதை எல்லாருமே ரசிக்குறாங்க. டி.வி, மொபைல், இன்டர்நெட்டுன்னு டெக்னாலஜி பெருகிட்ட இந்தக் காலத்துல நாடகம் அழிஞ்சுட்டே வருது. எத்தனையோ கலைகள் அழிஞ்சு, கலைஞர்கள் நடுத்தெருவுல நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 60 வயசு ஆனாலும், மேடையேறி சம்பாதிக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லோருக்காகவும் இந்தக் கலையை விட்டுடாம தொடர்ந்து கொண்டுபோவேன்” என நம்பிக்கையோடு சொல்கிறார். 

வருங்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறதாம் இவருக்கு. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருக்கும் அழகேஸ்வரி என்கிற 'லண்டன் புகழ்' சிம்ரனுக்கு வாழ்த்துகள்


டிரெண்டிங் @ விகடன்