வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (27/02/2018)

கடைசி தொடர்பு:20:40 (27/02/2018)

மணமகனுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்! - உயர் நீதிமன்றத்தை நாடிய தி.மு.க

`மணமகனின் மருத்துவச் சான்றிதழ் இல்லாததால், பல பெண்கள் வாழ்வைத் தொலைத்துவிடுகின்றனர். எனவே, மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்' எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் தி.மு.க வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான். 'இதன்பேரில் மத்திய, மாநில அரசுகள் ஒருவாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.  

தி.மு.க வழக்கறிஞர் வெற்றிகொண்டான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இந்து திருமணச் சட்டப் பிரிவு 7-ன்படி சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாது என்னும் கருதுகோளைக் கொண்டிருந்தது. இதில் 1967-ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா மாற்றம் கொண்டுவந்தார். அதன்படி, 'மாலை மாற்றி மணம் செய்துகொண்டாலே போதும். திருமணம் செல்லும்' என்று விதி திருத்தப்பட்டது. திருமண பதிவுச்சட்டப் பிரிவு 3-ன்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயம் என்று சொல்கிறது. நம் நாட்டில் 90 சதவிகித விவாகரத்துகள்,  உடல்ரீதியான பிரச்னைகளால்தான் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளை மறைத்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். உண்மை புரிந்ததும் உறவு கசக்கிறது. அதன்பிறகு விவாகரத்து கோருகின்றனர். இதைவிடக் கொடுமை, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மணமகன்கள், தங்களுக்கு இருக்கும் நோய்களைப் பற்றிக் கூறாமலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் மனநிம்மதியும் பறிபோகிறது. 

adv

எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களால், சம்பந்தப்பட்ட பெண்ணும் அவருக்குப் பிறந்த குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். எனவே, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என்னும் நடைமுறையைக் கொண்டுவந்தால், உடல் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்வது தடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 'இதுபற்றி ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் கூறுகையில், “எங்களது மனுவின் மீது நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால் விவாகரத்துகள் குறையும். திருமணத்துக்குப் பிறகு மனநிம்மதியை இழந்துவாடும் பெண்களுக்குத் தீர்வாக அமையும்” என்றார் உறுதியாக.