வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (28/02/2018)

கடைசி தொடர்பு:16:43 (09/07/2018)

வேறுமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களைப் பாதுகாக்க குழு! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வேறு மாநிலங்களுக்குப்  படிக்கச்  செல்லும் மாணவர்களைப் பாதுகாக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது என்று புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 


 

புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,"தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு உயர்மருத்துவப் படிப்பிற்கு செல்லும் மாணவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு முறையான கவுன்சலிங் செய்யவும் தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். நேற்று சண்டிகரில் மருத்துவ உயர்கல்வி படிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர் இறந்துள்ளார்.

அவர்து உறவினர்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மாணவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு சிறப்புக் குழு ஒன்று சண்டிகருக்குச் சென்றுள்ளது. இனி இது போன்று சம்பவங்கள் நடக்காமலும் மாணவர்கள் இறக்காமலும் தடுப்பதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று இந்திய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதில் உள்ள சில ஷரத்துக்களை தமிழக அரசு எதிர்க்கிறது. அதில், சில திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அந்த ஷரத்துகள் மருத்துவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டும என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும், தமிழகம் இந்தியாவில் சுகாதாரத்துறையில் முதல் மாநிலமாக இருப்பததால், இந்திய மருத்துவ ஆணையத்தில் தமிழகத்திற்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்கவும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்" என்றார்.