வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (28/02/2018)

கடைசி தொடர்பு:16:41 (09/07/2018)

“ஒகி புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்பேன்!”-பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

ஒகி புயல் பாதிப்புக்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியைவிட கூடுதலாக வழங்க கோரிக்கை விடுப்பேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராமநாதபுரத்தில் முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தூத்துக்குடி துறைமுகத்தில் துவக்கி வைத்த திட்டங்கள் மூலம் அங்கு மேலும் வளர்ச்சி ஏற்படும். இதே போல் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீருடன், கோதாவரியில் இருந்து வரக்கூடிய 150 டி.எம்.சி தண்ணீரும் தமிழகத்திற்கு வரும் நிலையில் விவசாயத்தில் தமிழகம் தன்னிறைவு பெறும். சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் தடையில்லா சாலை அமைய உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையின் பயனாக ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறும். கன்னியாகுமரி - சென்னை இடையேயான கடல்வழி போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக கன்னியாகுமரி-ராமேஸ்வரம் இடையே கடல்வழி போக்குவரத்து துவக்கப்படும். 

சண்டிகரில் இந்தி மொழி தெரியாததால் மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்.அதிலும் ராமேஸ்வரத்தில் பிறந்தவர். அவரது இறப்புக்கு இந்தி மொழியை காரணமாக கூறுவது திசை திருப்பும் முயற்சியாகும். இது குறித்து உரிய விசாரணை நடத்தினால் இறப்புக்கான பின்னணி தெரியவரும். இது போன்ற தொடர் மரண சம்பவங்களை தடுக்க உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு முன்னதாக இங்குள்ள சில அரசியல் கட்சியினருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

 சென்னை ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் இறைவணக்கம் எனக் கூறிய போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்போவதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் அப்போது கணபதி துதி பாடப்பட்டதை நானும் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஒகி புயல் பாதிப்பிற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதி போதுமானது இல்லை என்பதால் கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பேன்'' என்றார். இந்தப் பேட்டியின் போது பி.ஜே.பி நிர்வாகிகள் கூரியூர் நாகராஜன், முரளிதரன், ஆத்ம கார்த்தி, துரைக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.