வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:06:00 (28/02/2018)

ஆய்வு செய்ய வந்து ஆசீர்வாதம் வாங்கி சென்ற ஆளுநர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தி.மு.கவினர் கறுப்பு கொடி காட்டியும், கோஷமிட்டும் கடுமையான எதிர்பை தெரிவித்தனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் ஆய்வுசெய்வதாக பல்வேறு கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் படப்பை வந்த பன்வாரிலால் புரோஹித்திற்கு வடக்கு மண்டல தி.மு.க சார்பில் கறுப்பு கொடி வீசி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வந்த பன்வாரிலால் ரங்கசாமிகுளம் அருகே வந்தபோது, தெற்கு மாவட்ட சுந்தர் தலைமையில் காத்திருந்த தி.மு.கவினர் கறுப்பு கொடி அசைத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆளுநரின் வாகனம் மீது கறுப்பு கொடி வீசப்பட்டதால் காவல்துறையினர் அவற்றை தடுக்க முடியாமல் தினறினர். இதனால் தி.மு.கவினருக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஆளுநர் சென்றார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த பலனும் இல்லை எனக் கூறி, ஆளுநரிடம் பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து 4.30 மணிக்கு சங்கரமடத்திற்கு சென்றார். அவரை வரவேற்ற விஜயேந்திரர் உள்ளே அழைத்துச் சென்றார். ஜெயேந்திரரை சந்தித்து ஆசிபெற்றார்.

ஆளுநர் பான்வாரிலால் புரோஹித்

அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற ஆளுநருக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு தபால்தலைகளை கொடுத்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். இதையடுத்து அனைவரும் தூய்மை இந்தியாவின் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க