வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:14:49 (09/07/2018)

கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக  டி.வி சீரியல் பார்க்கக் கூடாது! மருத்துவர் அறிவுரை

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கான மனநல மருத்துவ முகாம் நேற்று (27.02.2018) நடைபெற்றது. இந்த முகாமில், புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான மனநலம் சார்ந்த விழிப்பு உணர்வுகளை எடுத்துக் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக 'மாவட்ட மனநலத் திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாண மாணவியருக்கு, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என அனைவருக்கும் மனநலம் தொடர்பான ஆலோசனைகள், மன அழுத்தம் தொடர்பான தீர்வுகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

 கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மனநல மருத்துவ முகாம்  நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இன்று, பரம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, முதல் குழந்தை பெறும்போது மனதில் ஏற்படும் பயங்கள், உடல் ரீதியான வேதனைகள், வலிகள், அதை எப்படி மன உறுதியுடன் எதிர்கொள்வது என்பதுபற்றிய ஆலோசனைகளை மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் வழங்கினார்.

அதேபோல, முகாமுக்கு தன் மனைவியை அழைத்து வந்த கணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கினார். மனைவியிடம் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள், அவர்களின் பாதுகாப்பு, அவசியமான கணவனின் அரவணைப்பு உள்ளிட்ட சகல விஷயங்களையும் எடுத்துக் கூறினார். 'தற்போதைய பரபரப்பான காலகட்டத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் டி.வி சீரியல்கள் பார்க்கக் கூடாது' என்றார்.