`புதுக்கோட்டையில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்!" -போலீஸ் விசாரணையில் நக்சல் தம்பதி ஒப்புதல்

"போலீஸ் எங்களைத் தீவிரமாக  தேடிவந்ததால், புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு பிடித்து, 3 மாதங்களாக பதுங்கி இருந்தோம்"என்று திருவள்ளூரில் கைதுசெய்யப்பட்ட நக்சல் தம்பதிகளான தசரதனும் செண்பகவள்ளியும் போலீஸ் விசாரணையில் கூறி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த வெற்றி வீர பாண்டியன், தசரதன், செண்பக வள்ளி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீஸார் கடந்த 10-ம் தேதி கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  தசரதனும் செண்பகவள்ளியும் நக்சல் இயக்கத்தில் தீவிரமாக இயங்குபவர்கள் என்பதும், அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்து வந்தவரான வெற்றி வீர பாண்டியன், தசரதனின் சொந்த அண்ணன் என்பதும் தெரியவந்தது. பழைய ஆவணங்களைச் சரிபார்த்த போது, கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தசரதன், பல வழக்குகளில் தேடப்பட்டுவந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.

10 வருடங்களுக்கு முன்பு, திருப்பதி மலையில் சாமி கும்பிட வந்த சந்திரபாபு நாயுடு மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சூத்திரதாரி, தசரதன் என்பதும் போலீஸாருக்குத் தெரியவந்தது. அத்துடன், திருவள்ளூர் மாவட்டத்தில் நக்சல் இயக்கத்துக்கு ஆள்களைச் சேர்க்கத் திட்டமிட்டதையும், அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். பழைய வழக்குகள் பலவற்றில் போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டுவருவதை அறிந்த இந்தத் தம்பதி, பதுங்குவதற்குத் தேர்ந்தெடுத்த ஊர்தான் புதுக்கோட்டை.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "கடந்த அக்டோபர் மாத இறுதியில், புதுக்கோட்டை திருக்கோர்ணம் அருகே உள்ள கோவில்பட்டி சாலையில் தனியாக வீடு எடுத்து, தசரதனும் செண்பக வள்ளியும்  தங்கி  இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கையிருப்பில் இருந்த பணத்தை வைத்து, இருவரும் வெளியே எங்கும் அலையாமல் குடும்பம் நடத்திவந்துள்ளனர். பிறகு,  தசரதன் மட்டும்  புதுக்கோட்டையில் பெயின்ன்டராக, ஓட்டல் சப்ளையராக பல்வேறு இடங்களில் வேலைக்குச் சென்றிருக்கிறார். நர்ஸிங்  படித்து, பயிற்சியும் பெற்றிருந்த செண்பகவள்ளி, வீட்டை விட்டு வெளியே எங்கேயும் செல்லாமல் இருந்திருக்கிறார். 

யாருக்கும் சந்தேகம் வந்துவிடாமல்  இருக்க, வீட்டை வாடகைக்குக்  கொடுத்தவர்களிடம் மட்டும் அவ்வப்போது இயல்பாகப் பேசி வந்திருக்கிறார். அதேநேரம், திருவள்ளூரில் தங்களது இயக்கம் தொடர்புடைய நண்பர்களிடம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். நண்பர்கள் சிலர், `போலீஸுக்கு பயந்தா புதுக்கோட்டையில் இருக்கீங்க?. மறுபடியும் இங்கே வந்துடுங்க. உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு’ என்று தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, சில  வாரங்களுக்கு முன்பு திருவள்ளூருக்குத் திரும்பிவிட்டார்கள். அவர்களின் செயல்பாடு முன்பைக்காட்டிலும் தீவிரமாக இருந்தது. அதைக் கண்டுபிடித்த நாங்கள், பிப்ரவரி 10-ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த புதுக்கோட்டையில் நக்சல் இயக்க நெட்வொர்க்கை தசரதன் தம்பதி விரிவுப்படுத்தி இருக்கிறார்களா? நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்களா... என்பதை அறிய, இருவரையும் கூட்டிக்கொண்டு புதுக்கோட்டைக்குச் சென்று விசாரணை செய்தோம். அவர்கள் அங்கு தலைமறைவாகத்தான் இருந்தார்கள் என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது" என்றார்கள். தற்போது, 3 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!