''மகளை 'கன்யாதானம்' செய்து கொடுத்த முதல் அம்மா நான்..!'' - ஒரு தாயின் நெகிழ்ச்சி

பெண் விடுதலையும், பெண்ணியமும் தெரியாத எளிமையான பெண்களே, ஆணாதிக்க மரபான சில பழக்க வழக்கங்களை 'ஜஸ்ட் லைக் தட்'டாக பிரேக் செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவராகத்தான் ராஜேஸ்வரி நம் கண்களுக்குத் தெரிகிறார்.  ராஜேஸ்வரி வேறு யாருமல்ல, 'மகளை மடியில் இருத்தி, கன்யாதானம் செய்துகொடுத்த தமிழ்ப்பெண்' என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில், வைரல் அம்மாவாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரிடம் வாட்ஸ் அப் காலில் பேசினோம்.

அம்மா

''ஆபீஸ்லேருந்து இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கேன். டின்னர் சமைச்சுட்டு நைட் எட்டு மணிக்குமேல கால் பண்ணட்டுமா'' என்றவர், சொன்னதுபோலவே ''இந்தியாவில் இப்ப டைம் என்னங்க'' என்ற கேள்வியுடன் லைனில் வந்தார். ''மாலை மூன்றரை மணி'' என்ற பதிலுடன் பேச ஆரம்பித்தோம்.

''என் மகளை நான்தான் கன்யாதானம் செய்து தரப் போகிறேன் என்று முடிவெடுத்தவுடனேயே, இதற்கு முன்னால் யாராவது, அம்மா தன் மகளைக் கன்யாதானம் செய்து கொடுத்திருக்கிறாரா என்று கூகுளில் தேடினேன். கூகுளுக்குத் தெரிந்து, எனக்குத் தெரிந்து  அப்படி யாருமே இதுவரை செய்யவில்லை என்று தெரிந்ததும் என்னை அறியாமல் பதற்றம் தொற்றிக்கொண்டது. என் மகள் சந்தியாவிடம் என் பதற்றத்தைப்பற்றிச் சொன்னவுடன், 'பதிமூணு வயதாக இருந்ததிலிருந்து, இப்போது வரை என்னைத் தனி மனுஷியாக வளர்த்தவள் நீதான்மா. நீ என்னைக் கன்யாதானம் பண்ணினாதான் எனக்குக் கல்யாணம். இல்லைன்னா நோ மேரேஜ்' என்று திட்டவட்டமாச் சொல்லிவிட்டாள்'' என்று பரவசத்துடன் பேசும் ராஜேஸ்வரி, ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்ற காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருடைய கடந்த காலத்துக்குள் நாம் கொஞ்சம் பயணிக்க வேண்டும்.

ராஜி

''21 வயதில் என்னைவிட 12 வயது  மூத்தவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு கணவருடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டேன். எங்களுக்குக் குழந்தைகள் பிறந்தனர். ஆனால், என் மீதோ, குழந்தைகள் மீதோ எந்தவித பிரியமும் இல்லாமலே இருந்தார் என் கணவர். இது பொருளாதார விஷயத்திலும் எதிரொலித்தது. இதை மாற்றுவதற்கு நானும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. பிள்ளைகளுக்கும் வயது அதிகரித்துகொண்டிருக்க, அவர்களுக்கும் பாசமில்லா அப்பாவின் இயல்பு புரிந்துவிட்டது. இதற்கிடையில் செல்லம்மாள் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் மட்டுமே படித்த நான், ஒரு கம்ப்ளீட் ஐ.டி கோர்ஸை ஆஸ்திரேலியாவில் முடித்துவிட்டு, ஐ.பி.எம்.மில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன். மகளுக்குப் பதிமூணு அல்லது பதினான்கு வயதிருக்கும்போது, சிறிதளவுகூட அன்பில்லாத என் கணவரைவிட்டு, மனம் நிறைய வருத்தத்துடன் சட்டப்படி பிரிந்துவிட்டேன். அதன்பிறகு பிள்ளைகள் மட்டுமே என் உலகமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். 

திருமணம்

 என் மகளுக்குத் திருமண வயது வந்ததும், என்னுடைய அரேஞ்சுடு மேரேஜ் தோற்றுப்போனதைப் பார்த்ததாலோ என்னவோ, 'அம்மா என்னை முழுசா நேசிக்கிற ஒருவரைத்தான் நான் லவ் மேரேஜ் பண்ணுவேன்' என்று சொல்லிவிட்டாள். அவள் மனம்போலவே சாம் என்ற ஆஸ்திரேலியரைத் திருமணம் செய்துகொண்டாள். திருமணம் எங்க வழக்கப்படி எல்லாச் சம்பிரதாயங்களுடன் நம்ம சென்னையில்தான் நடந்தது'' என்று வாழ்க்கையின் கடந்த காலத்தை நம்மிடம் புரட்டிய ராஜேஸ்வரி, மகளை அவர்தான் கன்யாதானம் செய்யப்போவதாக முடிவெடுத்த பிறகு நடந்த நிகழ்வுகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கல்யாணம்

''நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில்கூட மகளை, தந்தை தாரை வார்த்துக் கொடுக்கிற கலாசாரம்தான் இருக்கிறது. அதனால் என் மருமகனின் பெற்றோரும் இதைப்பற்றி என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு, ஆங்கிலம் தெரிந்த வாத்தியார் (புரோகிதர்) ஒருவர் மூலம் கன்யாதானம் என்றால் என்ன; அது ஏன் ஒரு திருமணத்துக்கு அவ்வளவு முக்கியம் போன்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்லி, நான்தான் அந்தச் சடங்குகளை எல்லாம் செய்யப் போகிறேன் என்று சொன்னதும், அவர்களும் சந்தோஷமாகி விட்டார்கள்'' என்கிற ராஜேஸ்வரி அடுத்துச் சொன்னதுதான் ஹைலைட். 

வைரல்

''என் மகளுக்கு நான்தான் அம்மா, அப்பா, எல்லாமே என்ற அன்பின் காரணமாகத்தான் அவளை என் மடியில் அமர்த்தி, கன்யாதானம் செய்துகொடுத்தேன். மற்றபடி, 'ஆம்பளை செய்றதை எல்லாம் பொம்பளைங்க செய்யக்கூடாதா' என்ற எண்ணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது'' என்கிற ராஜேஸ்வரி, தன் மகளைக் கன்யாதானம் செய்துகொடுத்த புகைப்படங்களைப் பல மாதங்களாகச் சமூக வலைதளங்களில் பகிராமல்தான் இருந்திருக்கிறார். புகைப்படங்களை எடுத்தவர் அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர, இப்போது வைரல் அம்மாவாகி விட்டார் ராஜேஸ்வரி!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!