வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (28/02/2018)

கடைசி தொடர்பு:09:37 (28/02/2018)

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது.

சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்த கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்குப் பதிவு செய்திருந்தன. இதையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டில் பலமுறை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கார்த்தி சிதம்பரத்திடம் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து பலமுறை விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன், 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.