வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (28/02/2018)

கடைசி தொடர்பு:11:31 (28/02/2018)

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சுப்ரமணியம் மாகாதேவ ஐயர் என்ற இயற்பெயரைக் கொண்ட ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 1954-ம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பின், 40 ஆண்டுகள் கடந்து 1994-ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 ஜெயேந்திர சரஸ்வதி சிறப்பு புரோகிதத்தன்மை மற்றும் புலமை மிக்கவர். இவருக்கு பல வருடங்களாகவே உயர் ரத்த அழுத்தம் இருந்துவந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அடிக்கடி குறைந்துவிடும். இதனால் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்தது. சங்கரராமன் கொலை வழக்குக்குப் பின்னர், மனதளவிலும் உடலளவிலும் அவர் சோர்வாகவே காணப்பட்டார். நேற்று காஞ்சிபுரம் வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விஜயேந்திரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்று சென்றார்.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனிற்றி ஜெயேந்திரர் இறந்துவிட்டார். பிறகு, அவரது உடல் சங்கர மடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆன்மிக வாதிகள் வருவார்கள் என்பதால், காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள்.

கஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். 

 

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.