ஜெயேந்திரர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உட்பட பல தலைவர்கள் இரங்கல்! | Jayendra Saraswathi passed away; leaders mourning

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (28/02/2018)

கடைசி தொடர்பு:12:14 (28/02/2018)

ஜெயேந்திரர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உட்பட பல தலைவர்கள் இரங்கல்!

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை (28.2.2018) உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயேந்திரர்


கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்னையால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சீர்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர் என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். 

`காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்’ எனத் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஞ்சி காமகோடி பீடாதிபதி மரியாதைக்குரிய ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.  அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் அவருடைய  விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கரமடப் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

`காஞ்சி பெரியவர் ஶ்ரீ ஜெயேந்திரர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி; ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று எஸ்.வி.சேகர் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது இரங்கல் செய்தியில் ‘சமூக சிந்தனையுடன்கூடிய ஆன்மிகவாதி காஞ்சி ஜெயேந்திரரை பாரதம் இழந்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஞ்சி சங்கரமடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி  இன்று காலை (28.2.2018) தனது 83 வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருடனும் அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்துக்கு எவ்வளவு மலையளவு கருத்துக்கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், திராவிடர் கழகம் அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும் துயரமும் அடைந்தேன். காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். காஞ்சி மடத்தின் சார்பில் ஏராளமான தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தார். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். மடாதிபதியாக இருந்தாலும் மக்களுடன்  நன்கு பழகியவர். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

83 வயதான காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, இயற்பெயர் சுப்ரமணியம் மாகாதேவ ஐயர். 1954-ம் ஆண்டு மார்ச் 22-ல், தனது 19-ம் வயதில் இளைய பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பின், 40 ஆண்டுகள் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்றார்.