மார்ச் 3 முதல் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போனுக்குத் தடை!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்ல, வரும் 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2-ம் தேதி இரவு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராயர் மண்டபம் மிகவும் சேதமடைந்தது. அங்கிருந்த கடைகள் சாம்பலானது. இதனால், தமிழக மக்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். ஆன்மிகவாதிகள் அறநிலையத்துறை மீதும், அறநிலையத்துறையினர் அங்குள்ள கடைக்காரர்கள் மீது குற்றம் சுமத்தினர். தமிழக அரசு, இந்த விபத்து  சம்பந்தமாக விசாரணை செய்யவும், வசந்தராயர் மண்டபத்தை மீண்டும் புனரமைக்கவும் பல குழுக்களை அமைத்து செயல்படுத்திவருகிறது. மத்திய பாதுகாப்புப் படையினரும் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளனர். காவல்துறையும் விசாரணை நடத்திவரும் நிலையில், கோயில் பாதுகாப்பு சம்பந்தமாக உயர் நீதிமன்ற மதுரை கிளை, சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

மீனாட்சியம்மன் கோயிலுக்குள்

அதைச் செயல்படுத்தும் வகையில், உள்ளே இருக்கும் கடைகளைக் காலிசெய்துள்ள கோயில் நிர்வாகம், ''கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடும் வகையிலும், பாதுகாப்பு கருதியும், வரும் 3-ம் தேதி முதல் யாரும் செல்போன் கொண்டுவரக் கூடாது. அதனால், வெளியூர் பக்தர்கள் தங்கள் செல்போன்களைத் தங்கியுள்ள இடங்களிலும், வாகனத்திலும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறந்துவிட்டு செல்போன் கொண்டுவருகிறவர்கள், வடக்கு, மேற்குக் கோபுர வாசல்களில் செல்போனை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்புக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!