கட்சிப் பலகையில் ஜெயலலிதா படம்; கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்ட டி.ராஜேந்தர் | T.Rajendar important announcement about his political life

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (28/02/2018)

கடைசி தொடர்பு:12:23 (28/02/2018)

கட்சிப் பலகையில் ஜெயலலிதா படம்; கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்ட டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர், தன் இலட்சிய தி.மு.க கட்சி பலகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை இணைத்துள்ளதோடு, தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.
 

டி.ராஜேந்தர்

பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், இலட்சிய தி.மு.க என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, செயல்பட்டுவருகிறார். சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அலுவலகத்தில் விழா ஏற்பாடுசெய்து அசத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வரும் 28-ம் தேதி (இன்று), என் அரசியல் வாழ்வின் முக்கிய முடிவை அறிவிப்பேன்’ என்றார். 

டி.ராஜேந்தர்

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ராஜேந்தர் தன் அறிவிப்பை தாங்கிய கட்சிப் பலகையைத் திறந்து வைத்தார். அதில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்துப் பேசிய அவர், ‘இவர்கள் நான்கு பேரின் ஆன்மாதான் என்னை வழிநடத்த வேண்டும். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் தூக்கி எறியப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால், எனக்கும் இன்று அதே நிலைமைதான். அன்றைக்கு அவருக்கு ஏற்பட்ட வலியை இன்றைக்கு என்னால் உணர முடிகிறது.  இனி, தி.மு.க-வுக்கும் எனக்கும் தொடர்பில்லை. ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த தி.மு.க, இனி என்ன ஆகும் என தெரியாது. ஜெயலலிதா எனக்கு இணை செயலாளர் பதவி தருவதாக அழைத்தார். ஆனால், நான் திமுக தலைவரை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்பதில்லை என கூறினேன். புது உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு, லட்சிய திமுக-வை தொடர்ந்து நடத்துவேன். என் வழி தனி வழி. 

தந்தை பெரியாருக்கும் சரி, அறிஞர் அண்ணாவுக்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி, ஜெயலலிதாவுக்கும் சரி, பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இவர்கள் நான்கு பேரின் ஆன்மாக்களின் கொள்கைகளுக்கு இனி நான் தத்துப்பிள்ளை’ என்றார். 

டி.ராஜேந்தர்

2013-ம் ஆண்டு, டி.ராஜேந்தர் மீண்டும் தி.மு.க-வில் இணைந்தபோது, கருணாநிதி  வெளியிட்ட அறிக்கையின் அசல் நகலை இன்றைய நிகழ்ச்சியில் வெளியிட்ட டி.ராஜேந்தர், ’'கலைஞர் கருணாநிதியைத் தவிர யாரையும் அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், இன்றைய தி.மு.க,  ஸ்டாலினின் தி.மு.க-வாக இருக்கிறது. அழகிரி பண்பானவர், ஸ்டாலினிடம் அது இல்லை, கோஷம் போடுபவர்களுக்கு தான் தி.மு.கவில் பதவி கிடைக்கும்.’' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க