கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த ரூ.10 லட்சம்!

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இந்திராணி, இவரின் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் என்ற பெயரில் மீடியா நிறுவனத்தைத் தொடங்கினர். மகளை (ஷீனா போரா) கொலை செய்த வழக்கில் தற்போது இருவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் கைது

2007-ம் ஆண்டு சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.300 கோடி வரை நிதி திரட்ட உதவியதாகக் கார்த்தி சிதம்பரத்தின்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. 'அட்வான்டேஜ் ஸ்டரேஜிக் கன்சல்டிங் ' என்ற நிறுவனத்தை மறைமுகமாக நடத்தி வந்த கார்த்தி, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி முதலீட்டை திரட்ட உதவிய வகையில், ரூ.10 லட்சம் கன்சல்டிங் தொகையாகப் பெற்ற ஆதாரம் சி.பி.ஐ-க்கு கிடைத்துள்ளது. இது ஒரு பகுதி தொகைதான் என்றும்  ரூ.3.5 கோடி வரை கார்த்தி சிதம்பரம் பெற்றிருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வெளியிட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த கார்த்தி, தன் மகளை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க தன்னை லண்டன் செல்ல அனுமதிக்க வேண்டுமென கூறியிருந்தார். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடிக்கவே கார்த்தி, லண்டன் செல்வதாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சில நிபந்தனைகளுடன் கார்த்தி வெளிநாடு செல்ல, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்ற உத்தரவின்படி பிப்ரவரி 28-ம் தேதி அவர் தாய்நாடு திரும்ப வேண்டும். 

இதற்காகவே காத்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், சென்னை வந்திறங்கிய அடுத்த விநாடியில் அவரைக் கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், 10.40 மணி விமான நிலையத்தில் அவரை டெல்லி கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாகக் கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு சரியான முறையில் ஒத்துழைக்கவில்லை என்றும் சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

கார்த்தி கட்டம்கட்டப்படுவதை அறிந்த ப.சிதம்பரம் இரு நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆளும் பி.ஜே.பி அரசு, தன் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் அதன் விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட்டுள்ளது. என் மகனைக் குறிவைத்து செயல்படுகிறது'' என்று கூறியிருந்தார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!