`உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா தினகரன்?' - சீண்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ | ADMK MLA slams Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (28/02/2018)

கடைசி தொடர்பு:15:10 (28/02/2018)

`உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா தினகரன்?' - சீண்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ

''தினகரன் எந்தக் கட்சிக்கு துணைப் பொதுச்செயலாளர்? உங்களுக்கு இது அசிங்கமாக இல்லையா. உங்களைப் பற்றி ஊர் உலகத்துக்கே தெரியும்" என்று கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம்.

                                 தினகரன்- எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம்                                

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயங்கொண்டத்தில் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், தினகரன் அணியினரை கடுமையாக விமர்சனம்செய்தார்கள். எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் பேசும்போது, "தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர், அம்மாவின் பெயரைப் பயன்படுத்தி கோடி கோடியாக கொள்ளையடித்த கூட்டம். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு போலி அரசியல்செய்து மக்களை ஏமாற்றுவதுடன், அம்மாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் போலி அரசியல் எல்லாம் இனி எடுபடாது. மக்களுக்குத் தெரிந்துவிட்டது, யார் உண்மையானவர்கள்... யார் போலியார்கள் என்று. ஆர்.கே.நகர் இடைதேர்தலில் ஓட்டுக்குப் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியது அம்பலமாகிவிட்டது.

இனி அவர், அவரது தொகுதிக்குள் நுழைவதே சிரமம். கழகப் பொதுச்செயலாளரை கட்சியை விட்டு நீக்கியாச்சு. நீங்க, கழகப் பொதுச்செயலாளர் எனப் பதவியைப் போட்டுக்கொள்கிறீர்களே உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா? நீங்க எந்தக் கட்சிக்கு கழகப் பொதுச் செயலாளர்? அ.இ.அ.தி.மு.க எனப் பெயரைப் போட்டுக்கொள்கிறீர்களே கூச்சமா இல்லையா? எந்த முகத்தை வைத்து போட்டுகொள்கிறீர்கள்? இதை உடனே நிறுத்தவேண்டும்; இல்லையேல் நாங்கள் நிறுத்த வைப்போம். அரியலூர் மாவட்டத்தில், தினகரன் அணியில் இருப்பவர்கள் எல்லாம் துரோகிகள்தான். தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க-வுக்கு துரோகங்கள் மட்டுமே கொடுத்தார்களே தவிர, உழைப்பைக் கொடுக்கவில்லை. கடந்த தேர்தலின்போது, தங்கள் உழைப்பைக் கொடுத்து மாம்பழக் கட்சிக்குத்தான் வாக்கு கேட்டார்கள். இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கவில்லை.

நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் படலம் தொடர் கதையாகிவருகிறது. கட்சி ஆரம்பித்தவர்களின் நிலை என்ன தெரியாதா? நடிப்பு வேறு அரசியல் வேறு. அரசியலுக்கு வருவதற்கு எம்.ஜி.ஆரைப் போன்று தகுதி இருக்க வேண்டும். உதவக்கூடிய நல்உள்ளம் வேண்டும். இவையெல்லாம் தற்போதைய நடிகர்களுக்கு இருக்கிறதா என்று முதலில் அவர்கள் கண்ணாடி முன் நின்று தங்கள் முகத்தை பார்த்து கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். நடிப்பது எளிது; ஆள்வது கடினம். நடிகர்கள் நம்ம நாட்டுக்காக, நம் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?  சினிமாவில் நடித்து கோடிகோடியா பணம் சம்பாதித்தார்களே தவிர, தமிழக மக்கள் பிரச்னைக்காக எந்த சிறைக்கும் செல்லவில்லை. நடிகர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அ.இ.அ.தி.மு.க-வை எவராலும் அசைக்க முடியாது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க வெற்றிபெறும்" என அதிர்ந்து பேச்சை முடித்தார்.


[X] Close

[X] Close