வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (28/02/2018)

கடைசி தொடர்பு:18:07 (28/02/2018)

`நெஞ்சுவலியால் துடித்தபோது கண்டுகொள்ளவில்லை!’ - ஓ.எஸ்.மணியன்மீது பாய்ந்த ஓட்டுநரின் உறவினர்கள்

மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் அலட்சியத்தால்தான் அவரின் ஓட்டுநரான சவுந்திரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார் என்று ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஓட்டுநரின் உறவினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பின்வருமாறு, சென்னை சூளைமேட்டில் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த 33 வயது சவுந்திரராஜன் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சவுந்திரராஜன் இன்று வழக்கம்போல் அமைச்சரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்குப் பணிக்குச் சென்றார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியில் துடித்த சவுந்திரராஜனை அமைச்சர் வீட்டில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வலி தாங்க முடியாமல் பாதி வழியிலேயே வண்டியிலிருந்து கீழே விழுந்தவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சவுந்திரராஜன் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அவரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். 

’உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால்தான் சவுந்திரராஜன் உயிரிழந்தார். நெஞ்சுவலி ஏற்பட்ட ஒருவரை மனிதாபிமானம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். கார் வேண்டாம்.. ஆட்டோவிலாவது அழைத்துச் சென்றிருக்கலாம் இல்லையா? சவுந்திரராஜனின் குடும்பம் அநாதையாக நிற்பதற்கு அமைச்சரின் அலட்சியம்தான் காரணம்’ என்று அவரின் உறவினர்கள் கொந்தளிக்கிறார்கள்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க