இரவோடு இரவாக அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகள்! | MGR, Jayalalithaa's statue are removed by police at thiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (28/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (28/02/2018)

இரவோடு இரவாக அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவ சிலைகளை நேற்று (27.2.2018) இரவோடு இரவாகப் போலீஸார் அகற்றினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலை

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தலைமையில், திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் அரசு அனுமதியின்றியும் நீதிமன்ற உத்தரவை மீறியும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகளால் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் சிலை திறப்பு கைவிடப்பட்டது. அன்றிலிருந்து மூடி வைக்கப்பட்டு இருந்த சிலைகள், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று திறக்கப்பட வேண்டும் என 22-ம் தேதி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போதும் அனுமதி தராததால், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று இரவோடு இரவாகச் சிலைகளைத் திறந்து மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து 4 நாள்கள் பொருமைகாத்த போலீஸ் நேற்று இரவு 2 மணி அளவில் சிலைகளை அகற்றியது. தகவல் அறிந்து அ.தி.மு.க-வினர் அங்கு திரண்டு, சிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தியதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

அதேபோல் ஆரணி  பேருந்து நிலையம் அருகில் தி.மு.க கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளை அனுமதியின்றி இரவோடு இரவாக அமைத்த அ.தி.மு.க-வினர், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று இரவு சிலைகளைத் திறந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் ஜெயலலிதா சிலையை உடைக்க முயன்றனர். அ.தி.மு.க, தி.மு.க-வினர்க்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த சிலையையும் நேற்று இரவு போலீஸ் அகற்றியது. இதேபோல் அனுமதியின்றி செங்கத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை, தோவக்கவாடியில் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, சேத்துப்பட்டில் வைக்கப்பட்ட காமராஜர் சிலை ஆகியவற்றை இரவோடு இரவாக இரவு 2 மணி அளவில் சிலைகளை அகற்றி போலீஸ் நடவடிக்கை எடுத்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க