வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (28/02/2018)

வைரத்துக்கு `ஸ்கெட்ச்' போட்ட ரவுடிகள் - அண்ணனுக்காக எதிரியைத் தீர்த்துக்கட்டிய தம்பி 

கத்தி

 சென்னையில் ரவுடிகள் ராஜ்ஜியத்தைக் கூண்டோடு ஒழிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ரவுடி வைரத்தை அவரது எதிர்தரப்பினர் நேற்றிரவு கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற நவரத்தினம். ரவுடியான இவர்மீது பல வழக்குகள் உள்ளன. ரத்தினம் டீமுக்கும் பழந்தண்டலத்தைச் சேர்ந்த ரவுடி வைரம் டீமுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் கடந்த முறை ரத்தினம் டீம், வைரத்தைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில், வைரம் தப்பிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வைரம் டீம், ரத்தினத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டது. அதன்படி நேற்றிரவு பழந்தண்டலம் சுடுகாடு அருகே ரத்தினத்தைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இந்தத் தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸ் டீம், ரத்தினத்தின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரத்தினத்தைக் கொலை செய்தது வைரத்தின் டீம் என்று தெரியவந்தது. இதையடுத்து வைரத்தின் கூட்டாளிகள், 6 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இதில் வைரத்தின் தம்பியும் போலீஸிடம் சிக்கியுள்ளார். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அண்ணன் வைரத்தைக் கொலை செய்ய திட்டமிட்ட ரத்தினத்தை வைரத்தின் தம்பி தலைமையிலான டீம்தான் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 ஏற்கெனவே, பிரபல ரவுடி பினு, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவடி பினுவின் எதிர் டீமும் சிறைக்குள் இருப்பதால் ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், பினுவை, சிறைக்குள் தீர்த்துக்கட்ட ஒரு டீம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கூடுதல் கண்காணிப்பில் புழல் சிறைச்சாலை வளாகம் உள்ளது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, சென்னை மாநகர போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில் ரவுடி ரத்தினம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.