வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/02/2018)

கடைசி தொடர்பு:18:40 (28/02/2018)

சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

கோரக்பூர் சிறைச்சாலையில் உள்ள 23 கைதிகள் ஹெச்.ஐ.வி ( எய்ட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்ஐவி

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் சிறைச்சாலையில் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு, கடந்த அக்டோபர் மாதம் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், கைதிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அப்போது, ஒரு பெண் உட்பட 22 கைதிகள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, சிறைக் கண்காணிப்பாளர் கூறுகையில், ``ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச், 2014-ம் ஆண்டு கைதியாக சேர்க்கப்பட்டார். மேலும், 16 பேர் 2016-ம் ஆண்டு மற்றும் 2017-ம் ஆண்டின் இடையில் கைதிகளாகச் சேர்க்கப்பட்டனர். மீதம் உள்ள 7 பேர் 2 மாதங்களுக்கு முன்தான் இங்கு வந்து சேர்ந்தனர். மேலும், ஜெயிலுக்குள் ஹெச்.ஐ.வி நோய் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அதனால், கைதிகள் ஏற்கெனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்'' என்றார். 

ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே சிறையில் உள்ள 23 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.