வங்கதேசத்தில் இறந்த தமிழ்ப் பெண்! - மேற்கு வங்கத்தில் திருப்பூர் போலீஸ் விசாரணை

தமிழ்ப் பெண் பூர்ணதேவி

வங்கதேசத்தில் மர்ம மரணமடைந்த அவினாசி பெண் குறித்து திருப்பூர் போலீஸார் மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகானந்தம். இவரின் மனைவி செல்வகோமதி. இத்தம்பதிக்குத் தமிழரசன் மற்றும் பூர்ணதேவி என மொத்தம் இரண்டு குழந்தைகள். 12-ம் வகுப்பு முடித்த பூர்ணதேவியை அவரின் பெற்றோர் குடும்ப வறுமையின் காரணமாகப் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆதித்யா நிட்ஸ் என்ற அந்தப் பனியன் நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய ரிமுஷேக் என்ற வாலிபருடன் பூர்ணதேவிக்கு
காதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தன் வீட்டைவிட்டு வெளியேறி, ரிமுஷேக்குடன் வங்கதேசத்தில் குடியேறினார் பூர்ணதேவி.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதியன்று வங்கதேசத்தில் பூர்ணதேவி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவரின் கணவர் ரிமுஷேக், திருப்பூரில் உள்ள பூர்ணதேவியின் பெற்றோருக்குத் தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பூர்ணதேவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடத்திலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடத்திலும் புகார் மனு அளித்தனர். மேலும், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, என் மகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

தமிழ்ப் பெண் பூர்ணதேவி

அதைத்தொடர்ந்து பூர்ணதேவியின் மரணம் தொடர்பாக விசாரிக்க, அவினாசி பகுதி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தற்போது ரிமுஷேக்கின் சொந்த ஊராகக் கருதப்படும் மேற்கு வங்க மாநிலம் சவுத் 24 பரகனாஸ் மாவட்டத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. அங்கு ரிமுஷேக் குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டுவதோடு, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், முதலில் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ரிமுஷேக் - பூர்ணதேவி தம்பதியர், எப்படி அண்டை நாடான  வங்கதேசத்துக்குச் சென்றார்கள் என்றும், அங்கு பூர்ணதேவியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற உண்மையையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!