ஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி: காவிரி உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை

ஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாக காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றக் கோரியும் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வலியுறுத்தியும் இன்று தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி உரிமை  மீட்புக்குழு

இதில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ‘பெங்களூரு உலக நகரம் எனப் புகழ்ந்து அதற்காகத் தமிழ்நாட்டில் காவிரிநீர் பங்கில் இருந்து 14.75 டி,எம்.சி தண்ணீரைப் பிடுங்கி, கர்நாடகாவுக்குக் கொடுத்துள்ளது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு. பெங்களூருவைவிட, சென்னை மாநகரம் மக்கள் தொகையிலும் நிலப்பரப்பிலும் தொழிற்சாலை அடர்த்தியிலும் பல மடங்கு பெரியது. சென்னை மாநகர மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இது பற்றி உச்ச நீதிமன்றம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஏன் இந்த இன முரண்பாடு. ஓரவஞ்சனை. காவிரி ஆறு மத்திய அரசுக்குச் சொந்தமானது என்றும் தேசிய சொத்தும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையைப் பாராட்டி, அதன் வழிகாட்டுதலின்படியே தீர்ப்பை எழுதியதாக நீதிபதிகள் கூறியுள்ளன. தேசிய நீர் கொள்கை மிகவும் ஆபத்தானது. மாநிலங்களிடம் உள்ள ஆற்று நீர் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டு, தனியாருக்கு குத்தகைக்கு விடும். குத்தகைதாரர் மீட்டர் பொருத்தி தண்ணீர் விற்பார். விவசாயத்துக்கும் குடிநீருக்கும் விலை கொடுத்துதான் நம் மக்கள் தண்ணீரை வாங்கியாக வேண்டும். மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையை நடைமுறைப்படுத்தவதற்கான அடுத்தகட்ட நகர்வாகவே இதற்கு காவிரி தீர்ப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!