வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (28/02/2018)

கடைசி தொடர்பு:20:31 (28/02/2018)

”நெகட்டிவ் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே எங்கள் சக்தியெல்லாம் வீணாகிறது!” - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சவுந்தர்ராஜன்

''தமிழகத்துக்குத் தண்ணீர் வேண்டுமென்றால் கிடைக்கும்... ஆனால், காவிரித் தண்ணீர்தான் வேண்டும் என்றால்... அது கிடைக்காது'' என்கிறார் பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ''காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை'' என்கிறார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. அண்மையில் தமிழகம் வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கோரிக்கைக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதற்கிடையில், இவ்விவகாரம் குறித்துப் பேசிய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ''காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை அரசியலாக்காமல், தமிழகப் பகுதிகளில் புதிதாக அணை கட்டுவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்'' எனக் கூறியிருக்கிறார்.
'என்னதான் நடக்கிறது....?' தமிழிசை சவுந்தர்ராஜனிடமே பேசினோம்....

 ''காவிரி நதி நீர் பிரச்னையில் நேரடி பதிலைக் கூறாமல், பிரச்னையைத் திசை திருப்புவதுபோல், பி.ஜே.பி தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்களே...?''

''காவிரி விவகாரத்தில், பி.ஜே.பி-க்கு அக்கறை இல்லாதது போன்றதொரு கருத்தை அனைவருமே உருவாக்கி வருகிறீர்கள். உண்மையில், எல்லோரையும்விட பி.ஜே.பி-யினருக்குத்தான் காவிரியில் உண்மையான அக்கறை உள்ளது. தமிழகத்தின் நலன் கருதி மேகதாது அணை கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியது மத்திய பி.ஜே.பி அரசுதான். 

காவிரி விவகாரத்தில் பி.ஜே.பி-யைக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது காவிரிக்காக என்ன செய்தார்கள்.... இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்புகிறீர்களா?''

''காவிரி நதிநீர் ஆணையம் குறித்து தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியும் மௌனம் சாதித்துவிட்டாரே....?''

''இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு நாடு. சாதாரணமாக அரசியலில் பேசுகிற மாதிரி ஒரு பொதுமேடையிலேயே, 'நான் அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன்' என்று பேசிவிட முடியாது. இந்த விஷயத்தில், 'இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்பதையெல்லாம் துறைரீதியாகத் தீர ஆய்வு செய்துவிட்டுத்தான் பேசமுடியும். இதுதான் சரியான வழிமுறை. 

நானே தமிழகம் முழுவதும் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசிவருகிறேன். அதில் சில மாவட்டங்களுக்குப் போகும்போது, அங்குள்ள கட்சிப் பிரச்னைகளைச் சொல்லி நியாயம் கேட்பார்கள். 'அங்கே என்ன பிரச்னை, யார் மீது தவறு' என்பது குறித்தெல்லாம் அந்தச் சமயத்தில் எனக்கு எதுவும் தெரியாதே... அதனால், நான் உடனடியாக அவர்களுக்கு எந்தப் பதிலையும் கூறிவிடுவது கிடையாது. இந்த உதாரணம்தான் உங்கள் கேள்விக்கான பதில்''

காவிரி

''6 வார காலத்துக்குள் காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை என்று நிதின் கட்கரி கூறுவது கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்துத்தானே...?''

''அது ஏன் பி.ஜே.பி தலைவர்களிடம் மட்டும் நெகட்டிவான தொனியிலேயே கேள்விகளைக் கேட்கிறீர்கள்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே எங்களது சக்தியெல்லாம் நிறைய விரயமாகிவிடுகிறது.  

'நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன' என்று நிதின் கட்கரி தெளிவாகச் சொல்லிவிட்டார். அதேசமயம், 'அரசாங்க ரீதியாக ஒரு வேலையை முழுமையாகச் செயல்படுத்தி முடிப்பதற்கு நடைமுறையில் நிறைய கால அவகாசம் வேண்டும்' என்றுதான் கட்கரி  சொல்லியிருக்கிறார். எனவே, நதிநீர் ஆணையம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.''

''காவிரியில் தண்ணீரே வரவில்லை என்கிறபோது, 'தமிழக அரசு புதிய அணைகள் கட்டவேண்டும்' என்று நீங்கள் கூறியிருப்பது எதன் அடிப்படையில்?''

''இதுநாள் வரையிலும் 50 டி.எம்.சி நீருக்குக் கூடுதலாக கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தரவில்லை என்கிறபோது, இப்போது 177 டி.எம்.சி நீர் கிடைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. எனவே, கிடைக்கிற தண்ணீர் முழுவதையும் பத்திரமாக சேகரித்து வைப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் 'காவிரி ஆற்றின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்' என்ற கருத்தை வெளியிட்டேன். 

சமீபத்தில் நடந்துமுடிந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக சில நீர் மேலாண்மை வல்லுநர்களோடு ஆலோசித்தேன். அப்போது, 'கிடைக்கின்ற தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு வசதியாக நீர் சேமிப்புப் பகுதிகளை ஆழப்படுத்த வேண்டும்; தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும்' என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினர். அதன் அடிப்படையில்தான் சர்வ கட்சிக் கூட்டத்திலும் இந்தக் கருத்தைத் தெரிவித்தேன். கர்நாடகத்தில் மாவட்ட வாரியாக நிறையத் தடுப்பணைகள் கட்டி நீரைச் சேமித்துப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிலோ ஒன்றிரண்டு அணைகள்தாம்  கட்டப்பட்டிருக்கின்றன. எனவே, முழுமையாக நிறையத் தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன்.''

''பி.ஜே.பி வலுவாக உள்ள கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய நீரைப் பெற்றுத் தந்து, தமிழகத்திலும் பி.ஜே.பி காலூன்ற வழி வகுக்கலாமே....?''

''தமிழகத்துக்கு காவிரித் தண்ணீரை வாங்கிக் கொடுத்துத்தான் அரசியலில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில், 'விவசாயிகள் பி.ஜே.பி-க்கு ஓட்டு போடவேண்டும்' என்ற நோக்கத்தோடு நாங்கள் காவிரித் தண்ணீர் விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை.... உண்மையிலேயே நூற்றுக்கு இருநூறு விழுக்காடு ஆர்வத்தோடு காவிரி விவகாரத்தை அணுகிவருகிறோம். 
தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும்போது இரண்டு மாநிலங்களில் எதுவுமே பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அதனால்தான், மேகதாது அணையைக் கட்டுவதற்கான தயார் நிலையில் கர்நாடக அரசு இருந்தபோதும், 'கட்டக் கூடாது' என்று உறுதியான நடவடிக்கையை எடுத்து தடுத்து நிறுத்தியது மத்திய அரசு. இத்தனை ஆண்டுகளாக யாருமே யோசிக்காத, 'கோதாவரி நீரை தமிழகத்துக்குக் கொண்டுவருவது எப்படி...' என்ற மாற்றுவழித் திட்டத்தையும் சிந்தித்து வருகிறோம். 

மோடி - எடப்பாடி

'சில டி.எம்.சி தண்ணீரைக்கூட தமிழகத்துக்குத் தராமல் சித்தராமையா பிடிவாதமாக இருந்தார். அப்போதுகூட இங்கேயுள்ள காங்கிரஸாரும், தி.மு.க-வினரும்கூட இதுகுறித்து எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம்.''

''காவிரியைப் பேசினால், கர்நாடகக் காங்கிரஸ் கட்சி, முல்லைப் பெரியாறு பற்றிப் பேசினால், கேரள கம்யூனிஸ்ட் கட்சி என்று பிரச்னையை அரசியல் ரீதியாக திசை திருப்புவது சரிதானா?''

''தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.... இது நீண்டகாலப் பிரச்னை. பல்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் காவிரிப் பிரச்னையில் ஒரு முடிவு ஏற்படாமல் நீண்டுகொண்டே போகிறது. ஆனால், 'இந்தப் பிரச்னையை பி.ஜே.பி-யினர்தான் தீர்த்துவைக்கவில்லை' என்பதுபோல் ஒருதரப்பாகவே விமர்சனம் வைக்கப்படுவதுதான் தவறு என்கிறேன். 

அரசியல் ரீதியாக நாங்கள் வாதம் செய்கிறோம் என்பதாலேயே, பிரச்னையில் தீர்வை நோக்கிப் போகவில்லை என்று அர்த்தம் கிடையாது. 
உடம்புக்கு முடியாமல் மிகவும் மோசமான நிலையில் என்னிடம் வரும் நோயாளியைப் பரிசோதித்துப் பார்க்கும்போது, 'இதற்கு முன் சிகிச்சை தந்த மருத்துவர் உங்களுக்கு என்னதான் சிகிச்சை கொடுத்தார்....' என்று கேட்கத்தான் செய்வேன். 'நோய் இவ்வளவு முற்றிய நிலையில் இருக்கிறதே...' என்ற ஆதங்கத்தில் கேட்கப்படும் கேள்விதான் இது. இந்தக் கேள்வியைத்தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன்.''

''உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை சுட்டிக்காட்டி, காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதுதானா?''

''நான் ஒரு மருத்துவர். 'காய்ச்சல்' என்று மருத்துவரைப் பார்க்க வருகிறீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பார்த்து, 'உங்களுடைய உடல்நிலை இயல்பான நிலையில்தான் உள்ளது. உங்களுக்கு ஜுரம் இல்லை' என்று நான் சொல்லிவிடுகிறேன். இன்னொரு மருத்துவரோ உங்களைப் பரிசோதித்துப் பார்த்து, 'உங்களுக்கு ஜூரம் இருக்கிறது' என்று உறுதி செய்கிறார். அப்படியென்றால், நான் ஏற்கெனவே கூறிய கூற்று அடிபட்டுப் போகிறது அல்லவா...? 

இதேபோல், தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருப்பதாகச் சொல்லி, காவிரித் தண்ணீரின் அளவு குறைக்கப்படுகிறது என்றால், அந்த நிலத்தடி நீர்மட்ட அளவு என்பது சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்யவேண்டியுள்ளது. எனவே, நிலத்தடி நீர்மட்டம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அதனையும் மறு சீராய்வு மனுவில் குறிப்பிட்டாக வேண்டும் என்று நான் ஏற்கெனவே தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளேன்.''


டிரெண்டிங் @ விகடன்