``என்னிடம் 2 கார்கள்தான் இருக்கு’’ - ஓட்டுநர் உயிரிழப்புக்கு அமைச்சர் கொடுத்த அலட்சிய பதில் 

`ஒட்டுநர் சௌந்தரராஜனின் மரணம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ஒ.எஸ்.மணியன்
 

சென்னை சூளைமேட்டில் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த 33 வயது சௌந்தரராஜன் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டில் ஓட்டுநராகப் பணிப்புரிந்து வந்தார். அவர், இன்று வழக்கம்போல் அமைச்சரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்குப் பணிக்குச் சென்றார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியில் துடித்த சௌந்தரராஜனை அமைச்சர் வீட்டில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வலி தாங்க முடியாமல் பாதி வழியிலேயே வண்டியிலிருந்து கீழே விழுந்தவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சௌந்தரராஜன் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அவரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். `உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால்தான் சௌந்தரராஜன் உயிரிழந்தார். நெஞ்சுவலி ஏற்பட்ட ஒருவரை மனிதாபிமானம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். கார் வேண்டாம்... ஆட்டோவிலாவது அழைத்து சென்றிருக்கலாம் இல்லையா. சௌந்தரராஜனின் குடும்பம் அநாதையாக நிற்பதற்கு அமைச்சரின் அலட்சியம்தான் காரணம்’ என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

maniyan driver

சௌந்தரராஜன்

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில் ‘சௌந்தர் இன்று அதிகாலை வேலைக்கு வந்தார். இங்குதான் காலை உணவும் சாப்பிட்டார். பின்னர் காரை கழுவியிருக்கிறார். நாராயணன் என்னும் ஓட்டுநரை அழைத்து, `எனக்கு உடம்பு சரியில்ல. நீ ஐயாவை அழைச்சிட்டு போ’ என்று கூறி கார் சாவியைக் கொடுத்திருக்கிறார். இன்று முதல்வர் உடனான முக்கியமான கூட்டம் இருந்தது. நான் காரில் புறப்பட்டபோது சௌந்தருக்குப் பதில் நாராயணன் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். எனவே என்னிடம் இருந்த 4,000 ரூபாயை வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு சௌந்தரை மருத்துவமனைக்குப் போகச் சொல்லுங்கள் என்று கூறினேன். ஆனால், சௌந்தர் தன் நண்பருடன் மருத்துவமனைக்குச் செல்வதாக நேரம் கடத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வலி அதிகமானதால் தானாக நடந்து செக்யூரிட்டி அறைக்குச் சென்று காவலரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வழியில் வண்டியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். ஆனால், தேவையில்லாமல் அவர் மரணத்துக்கு நான்தான் காரணம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன’ என்றார்.

`அவர் வலியால் துடித்திருக்கிறார். 108 ஆம்புலன்ஸுக்கு அழைத்திருக்கலாமே. ஏன் அமைச்சர் வீட்டில் கார்கள்கூட இல்லையா’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த மணியன், ‘என்னிடம் இரண்டு கார்கள் இருக்கின்றன. ஒரு காரில் என் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். அவசர மீட்டிங் என்பதால் நான் ஒரு காரில் சென்றுவிட்டேன்’ என்று பதிலளித்தார். ‘உங்கள் வீட்டில் நான்கு கார்கள் இருக்கிறதே’ என்று செய்தியாளர்கள் மீண்டும் கேள்வியெழுப்பினர். அதற்கு ஆவேசமாகப் பதிலளித்த மணியன் ‘ஒரு வீட்டில் எட்டு டிரைவரா வைத்துக்கொள்வார்கள்? மருத்துவமனைக்குச் செல்லாமல் அவர்தான் காலம் தாழ்த்தினார்’ என்று கடுகடுத்தார். ஆம்புலன்ஸுக்கு ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் கிளம்பிச் சென்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!