`அ.தி.மு.க-வை கபளீகரம் செய்ய நினைக்கிறார்கள்' - டி.டி.வி.யைச் சாடிய கொறடா | 'I think you are trying to make the AIADMK'

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/02/2018)

`அ.தி.மு.க-வை கபளீகரம் செய்ய நினைக்கிறார்கள்' - டி.டி.வி.யைச் சாடிய கொறடா

``முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை துன்புறுத்தியவர்கள், இப்போது அ.தி.மு.க-வை எப்படியாவது கைப்பற்றி கபளீகரம் செய்ய நினைக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது'' என்று தினகரன் தரப்பினரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் அரசுக் கொறடா தாமரை ராஜேந்திரன்.

அதிமுக கொறடா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்றது. வேப்பூர் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி எம்.பி சந்திரகாசி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசத்தொடங்கினார். அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு குடும்பம், ஓரங்கட்டப்பட்ட குடும்பம். இன்று ஒன்று சேர்ந்துகொண்டு நாங்கள்தான் ஜெயலலிதாவுக்கு உண்மையான விசுவாசிகள் என வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது. தினகரன் போயஸ்கார்டன் பக்கம்கூட சென்றது இல்லை. இன்று திடீரென எப்படிப் பாசம் வந்துவிட்டது. அப்படி உண்மையான பாசமிருந்தால் ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்தபோது அந்த நிகழ்வில், எம்.எல்.ஏ-வாக டி.டி.வி.தினகரன்  கலந்துகொண்டிருக்க வேண்டும். அந்த நிகழ்வை பாராட்டியிருக்க வேண்டும்.

அதிமுக கொறடா

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தனது கட்சியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஜெயலலிதா படத்திறப்பை பாராட்டியுள்ளார். ஆனால், டி.டி.வி.தினகரன் உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசியா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரைத் துன்புறுத்தி வற்புறுத்தி சில செயல்களைச் செய்தவர்கள், பயன் அனுபவித்தவர்கள் மீண்டும் இந்த இயக்கத்திலே ஊடுருவி எப்படியாவது இந்தக் கட்சியைக் கைப்பற்றி இந்த இயக்கத்தைக் கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அம்மாவின் உண்மையான தொண்டர்களாகிய நாம் விடக் கூடாது'' என்று தினகரனைக் கடுமையாக எச்சரித்தார்.