வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (28/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (28/02/2018)

நினைத்தது ஒன்று... நடந்தது வேறு.. கொள்ளையர்களை ஏமாற்றிய பத்துகடைகள்

கொள்ளை நடந்த வணிகவளாகம்

 சென்னை கொரட்டூரில் பத்து கடைகளின் பூட்டை உடைத்த கொள்ளையர்களுக்கு அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாந்து போய் திரும்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 சென்னை பாடி, எம்.டி.எச். சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 15க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக்கடைகளை இன்று காலையில் திறக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, பத்து கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, கடை உரிமையாளர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஒரு சிலரின் கடைகளின் மட்டுமே சில பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மற்றப்படி பெரியளவில் கொள்ளை சம்பவம் நடக்காததால் வியாபாரிகள் நிம்மதியடைந்தனர். இதையடுத்து, கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜன்பாபுவின் அலுவலகம், ரவியின் ஜெராக்ஸ் கடை, மானக்கின் நிதிநிறுவனம், பாலமணிகண்டனின் பேட்டரி விற்பனைக் கடை, வாசுவின் டெய்லர் கடை உள்ளிட்ட பத்து கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதில், பாலமணிகண்டனின் கடையிலிருந்து இரண்டு செல்போன் மட்டும் கொள்ளை போயிருந்தது. அதுபோல வாசுவின் டெய்லர் கடையில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிப்பட்டிருந்தது. அதே நிதிநிறுவனத்தில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றுவிட்டனர். ஒவ்வொரு கடைகளாக உடைத்த கொள்ளையர்கள் அங்கு எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இருப்பினும் ஒரே நேரத்தில் பத்துக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்த விவரங்களை சேகரித்துவருகின்றனர்.