விழுப்புரம் ஆராயி குடும்பம் தாக்கப்பட்ட விவகாரம்; வலுக்கும் போராட்டம்

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் திருக்கோவிலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த 21-ம் தேதி இரவு தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனையும் மிதித்துக் கொன்றது. அதேபோல சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தது. ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து விசாரணையில் இறங்கியிருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.

ஆராயி

இந்நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருக்கோவிலூரில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஆராயி குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும் திருக்கோவிலூர், வெள்ளம்புத்தூர் கிராமத்தில் தாராளமாகப் புழங்கும் கஞ்சா மற்றும் கள்ளச்சாரத்தை ஒழிக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர். அதேபோல ஆராயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி குற்றவாளிகளை உடனேக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறி பேரணியாகச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அசம்பாவிதம் எதுவும் நிகழாதவண்ணம் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக் குழுவினருடன் மாவட்ட துணை ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து போரட்டம் முடிவுக்கு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!