வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (28/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (01/03/2018)

`அந்த இளைஞர்களை ஏன் விசாரிக்கவில்லை?' - விழுப்புரம் ஆராயி சம்பவத்தில் கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

விழுப்புரம் ஆராயி

விழுப்புரம் ஆராயி வழக்கில் போலீஸாரின் விசாரணை முறைகளைக் குற்றம் சுமத்துகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 'கொலை நடந்து 7 நாள்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. `48 மணிநேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்' என்கிறார் காவல்துறை அதிகாரி. அந்த உறுதி மெய்ப்பட வேண்டும்' என ஆதங்கத்தோடு பேசுகிறார் எவிடன்ஸ் கதிர். 

விழுப்புரம் ஆராயி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ஆராயி. இவர்களுக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். உடல்நலமில்லாமல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆராயியின் கணவர் ஏழுமலை இறந்துவிட்டார். ஆராயியின் மூன்று மகன்கள் பெங்களூருவில் கூலித் தொழிலாளிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு மகள் ஈரோட்டில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 14 வயது மகள் தனம் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடைக்குட்டி சமயன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். ஆராயி கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.  கடந்த 21-ம் தேதி ஆராயி, தனம் மற்றும் சமயன் ஆகியோர் வழக்கம்போல பக்கத்து வீட்டில் டிவி பார்த்துவிட்டு, உறங்கச் சென்றனர். மறுநாள் விடிந்த பிறகும் அவர்கள் மூன்று பேருமே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பக்கத்துவீட்டில் இருப்பவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது ஆராயியும் சமயனும் தனமும் கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்தத் தாக்குதலில் சமயன் உயிர் பிரிந்துவிட்டது. ஆராயியும் தனமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டார் எவிடன்ஸ் கதிர். 

விழுப்புரம் ஆராயி

அவரிடம் பேசினோம். "இத்தகைய கொடிய செயலை யார் செய்திருப்பார்கள். தனமும் ஆராயியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. சமயனின் கழுத்துப் பகுதி நொறுக்கப்பட்டும் வயிற்றுப்பகுதி மிதிக்கப்பட்டும் நுரையீரல் சிதைந்துபோயும் இறந்துபோயிருக்கிறான். ஆராயி மற்றும் தனம் ஆகியோரின் பிறப்புறுப்பில் 4 இன்ச் அளவுக்கு காயங்கள் இருந்ததாக, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால், விசாரணை என்பது பெரிதாக நடைபெறவில்லை. வேறுவழியில்லாமல் போலீஸ் விசாரணையைத் துரிதப்படுத்தியிருக்கிறது.

ஆராயிக்கும் அவரது குடியிருப்புப் பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் குறித்த பிரச்னை இருப்பது தெரியவந்தது. இந்த நிலப்பிரச்னைதான் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்குமா அல்லது ஒரு வன்முறை கும்பல் இதுபோன்று தனித்திருக்கக்கூடிய குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சிதைக்கக்கூடிய வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களா அல்லது வெள்ளம்புதூர் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வது; காலனிக்கு வந்து கையைப் பிடித்து இழுப்பது போன்ற வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்தக் குற்றத்துக்கும் தொடர்பு உண்டா அல்லது இதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பார்களா என நான்குகட்ட விசாரணையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களைப் போலீஸார் பிடித்து விசாரணை செய்து அவர்களை விடுவித்தும் உள்ளனர்.

தற்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டிருக்கின்றனர். 'இது சாதியரீதியான கொலையோ பாலியல் வன்கொடுமையோ அல்ல. ஆகவே இதற்கு சாதிச்சாயம் பூச வேண்டாம்' என வருகின்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மற்றொரு கிராமத்திலிருந்து வருகின்ற அந்த இளைஞர்களின் செயல் என்பது வன்மம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களை ஏன் இந்த விசாரணையில் ஈடுபடுத்தவில்லை என்று போலீஸாரிடம் கேட்டால், 'ஆதாரம் இல்லை' என்கின்றனர். 'சாதி சண்டை வந்துவிடும்' என்று அச்சப்படுகின்றனர். பட்டியலின இளைஞர்களை எளிதாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, 'அவர்கள் குற்றமற்றவர்கள்' என்று தெரிந்தவுடன் விடுவிக்கிற போலீஸார், பட்டியலினப் பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்ட வேற்று சமூகத்து இளைஞர்களை ஏன் விசாரிக்க முடியவில்லை. அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம்; ஈடுபடாமலும் இருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் விசாரணையைக்கூட போலீஸார் மேற்கொள்ளவில்லை. 

கொலை செய்யப்பட்டு 7 நாள்கள் ஆகிவிட்டன. குற்றவாளி யார் என்று தெரியவில்லை. காவல் உயர் அதிகாரி 48 மணி நேரத்தில் குற்றவாளியைக் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம் என்று உறுதியளித்தார். அந்த உறுதி மெய்ப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். திருக்கோவிலூர் டி.எஸ்.பி அசோக்குமார், 'விசாரணை சரியாகச் சென்றுகொண்டிருக்கிறது. எப்படியும் 48 மணி நேர விசாரணையில் முன்னேற்றம் தெரியும்' என்று கூறினார். போலீஸாரின் இந்த விசாரணை என்பது ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்து விசாரிக்காமல் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா என்று விசாரிக்க வேண்டும். ஆகவே, அதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்த வேண்டும். இந்தப் புலனாய்வு குழுவில் சமூக ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும் கல்வியாளர்களும் இடம் பெறுவது அக்குழுவை பலப்படுத்தும்.

இந்த வன்முறை சம்பவத்துக்கு எதிராகத் தேசிய எஸ்.சி /எஸ்.டி ஆணையம் மட்டுமே வந்திருக்கிறது. தேசிய பெண்கள் ஆணையமும் தேசிய குழந்தைகள் ஆணையமும் இதுவரை எட்டிப்பார்க்கவில்லை" என்றார் வேதனையுடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க