வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (28/02/2018)

முதியோர் பென்ஷன் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து வரை - 'மறதி' சொல்லும் சேதி !

 

 

 

               முதியோர்

முதியோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் பட்டியலில் இருக்கும் 30 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதாக அரசு கணக்கு சொல்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் சூழ்நிலையும் ஒரு கட்டத்தில் உண்டானது. 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'முதியோர், ஆதவற்றோர் பெறும் உதவித்தொகை ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தப்படும்' என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழகத்தில் அவரின் மறைவுக்குப் பிறகு தற்போது நடந்துகொண்டிருப்பதும் ஜெயலலிதா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிதான். ஆனால், இந்த அரசில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்றாலும் தற்போது வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையாவது தொடர்ந்து கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன்தான் பயனாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த மாதமே முதியோர் உதவித் தொகையைப் பெறுவதில் பயனாளிகளுக்குச் சிக்கல்  உருவானது. 2016-ம் ஆண்டு நவம்பரில், "அம்மாவே சிகிச்சையில் இருக்காங்க,  பென்ஷன் வரலையேங்கற கவலை உங்களுக்கு...போங்க, அடுத்த மாசம் கடைசியிலே வந்து பாருங்க" என்று அதிகாரிகளால் பயனாளிகள் விரட்டப்பட்டனர். டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்ததும், உதவித்தொகை பெறுவோரின் நிலை இன்னும் மோசமானது. அப்போது தொடங்கி 2018 பிப்ரவரி மாதம் வரை, முதியோருக்கான உதவித்தொகை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துக்கொண்டுதான் உள்ளது.

 வங்கிகள் மோசம்...போஸ்ட்மேன்களே பரவாயில்லை !

'பயனாளிகளுக்கான உதவித்தொகையை தபால்காரர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு கொடுக்கிறார்கள்' என்று பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், அதுவரை நடைமுறையில் இருந்த மணியார்டர் மூலமான வழக்கத்தை தமிழக அரசு மாற்றியது. வங்கிகள் மூலம் பயனாளிகளின் சேமிப்புக் கணக்குகளுக்கே உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது. மூத்த குடிமக்களான பெரும்பாலான பயனாளிகள், வங்கிக் கணக்கைத் தொடங்க, வங்கிகளை நாடினர். 'பயனாளிகள் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளதா என்பதை வட்டாட்சியர் அலுவலகம் உறுதிசெய்து கொண்ட பின்னரே, பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப் படுகிறது' என்று விளக்கமும் சொல்லப்பட்டது. ஆனால், இன்றைய நிலவரம் அப்படி இல்லை. வட்டாட்சியர் அலுவலகம், ஆளுங்கட்சியின் வட்டச் செயலாளர் வீடு, வங்கிகளின் வாசற்படி எனப் பயனாளிகள் மாறி மாறி அலைந்துகொண்டிருக்கிறார்கள். என்றாலும், ஓரிடத்திலும், முழுமையான பதிலோ, தீர்வோ கிடைப்பதில்லை. உதவித்தொகை கோரி, பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணிக்கும் மூதாட்டிகளின் வேதனையை, காய்ந்து போன கண்ணீரின் வாசத்துடன் உணர முடிகிறது. "எனக்குப் பென்ஷன் பணம் போட்டு ஆறு மாதம் ஆகிறது, வட்டச் செயலாளர் வீடு, மாநகராட்சி அலுவலகம், பேங்க் ஆபீஸர்ன்னு மாத்தி, மாத்தி கையைக் காட்றாங்கப்பா... மூணு மாசமா பென்ஷன் வரலைன்னு கேட்கப் போய், இப்போது, அதுவே ஆறுமாசமா வளர்ந்திடுச்சு. அதிகாரிகளைப் பார்க்க மாடிகளில் ஏறி இறங்குவதே சிரமமாக இருக்கிறது. வங்கிகளில் போய் கால்கடுக்கக் காத்துக் கிடக்கிறோம். 'ரெகுலர் கஸ்டமர்கள் வந்து போகிற நேரம் இது, ஓரமாகப் போய் நில்லுங்கள், என்னவோ, பணம் போட வந்தது போல் காலையிலேயே வந்து விடுகிறீர்களே' என்று அங்கும் எங்களை விரட்டுகிறார்கள்" என்றனர். வேறு சில பயனாளிகளோ, "பணம் கொடுக்காமல் ஆறுமாதம் நிறுத்துவாங்க. நாமும் விடாமல், அவர்கள் சொல்கிற இடத்துக்கெல்லாம் போய்க்கொண்டே இருந்தால், ஒருநாள். 'இரண்டு மாதத்துக்குப் பணம் போட்டிருக்கோம். இரண்டு நாளில் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்து விடும்' என்பார்கள். சொன்னபடியே இரண்டு மாதத்துப் பணம், வங்கிக்கு வந்து விடும். அதன்பின் நின்றுபோன நான்குமாதப் பணத்தை வாங்குவதற்குள் அடுத்த நான்கு மாதம் வந்து விடும்... தொடர்ந்து முயற்சி செய்தால், மீண்டும் இரண்டு மாதப் பணத்தைக் கணக்கில் போடுவார்கள். மொத்தத்தில் 12 மாதப் பணத்தில் நான்குமாதப் பணம், எங்கள் கைக்கு வருகிறது" என்கிறார்கள். சமூகத்திலும், உற்றார்-உறவினர்கள் மத்தியிலும் தனித்து விடப்பட்ட பெரும்பாலான முதியோருக்கு இந்த உதவித்தொகைதான் ஊன்றுகோல் போல இருந்தது. தற்போது, அது பயனளிக்கவில்லை என்பதே உண்மை.

         முதியோர் ஓய்வூதியம்    மாடிப்படிகளில் தடுமாறும் மூதாட்டி

 மேலே உள்ள படத்தைப் பாருங்கள்  ...இந்த மூதாட்டி தொண்ணூறு வயதைக் கடந்தவர். (27.2.2018- அன்று எடுத்த படம்)  இந்த மூதாட்டி ஏறி இறங்கும் இரண்டாவது மாடிப் படிக்கட்டு, சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரேயுள்ள வட்டாட்சியர் அலுவலகப் படிக்கட்டுதான்.  அரசின் உதவித் தொகையைப் பெற எத்தனை மாடிப் படிகளில் ஏறி இறங்கினாலும், 'இன்று போய் நாளை வா' என்பதே அதிகாரிகளின் பதிலாக இருக்கிறது. கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கான உதவித் தொகையைப் பெற 6 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்... அதேபோல், முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை பெற 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமாம்... கட்டண அறிவிப்புப் 'பலகை' வைக்காமல் வசூலிக்கப்படும் இதுபோன்ற மோசடிகளை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, இப்படி வசூலிக்கும் தரகர்கள் உட்கார்ந்து வேலை பார்க்க,  வட்டாட்சியர் அலுவலகங்களில் தனி, இருக்கையே வழங்கப்படுகிறது. சமூகத்தாலும், உற்றார்- உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்களே இதுபோன்ற உதவித்தொகையைப் பெறுவதில் அதிகமாய் நடக்கிறவர்கள்... அவர்களை இன்னும் முடமாக்கி, நடை பிணமாக உலவவிடும் திட்டத்துக்கு மாற்றுப் பெயர்தான்,  'முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்திட்டம்'  என்ற அவப்பெயர், அரசுக்கு ஏற்படுவதற்குள் நிலைமையைச் சீர்செய்வதே நல்லது.

நம்முடைய மறதியால் ஏய்ப்பவர்க்கே லாபம்

முதியோர் உதவித்தொகை பிரச்னைக்குத் தீர்வுகாணப் புறப்பட்டால், மற்றொரு பிரச்னை வந்து, அதனை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதற்குக் காரணம் மக்கள் மற்றும் மற்றவர்களின் மறதி எனலாம்.சிக்குன்குனியா என்ற ஒரு நோயை அதற்குப் பின்னால் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலும், டெங்குக் காய்ச்சலும் மறக்கடித்து விடுகிறது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஒரு பெண் படுகொலை என்ற செய்தி, அதே கொடுமையில் ஐந்து பெண்கள் கொலை என்ற செய்தியால் மறக்கடிக்கப்பட்டு விடுகிறது. லாக்கப் மரணம் எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்தபோது கொதிக்க ஆரம்பித்த மக்கள், அதுவே தொடர்கதையாக மாறியதும், ஏற்கெனவே கொதித்தது, அப்படியே அடங்கியது. ஓர் அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பரபரப்புச் செய்தி, கோட்டையில் தலைமைச் செயலாளர் அறைக்குள் ஐ.டி.ரெய்டு மறக்கச் செய்தது. அந்த ரெய்டையும் கூவத்தூர் ஆடம்பர விடுதிக் காட்சிகள் மறக்கடித்தன. பண மதிப்பிழப்பை, ஜி.எஸ்.டி. மறக்கடித்தது. ஓ.பி.எஸ். தியானத்தை, ஈ.பி.எஸ். பதவியேற்பு மறக்க வைத்தது. ஈ.பி.எஸ். பதவியேற்பை, டி.டி.வி. தினகரன் வெளியேற்றம் மறக்கடித்தது. இவற்றையெல்லாம் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்திருப்பது மறக்கச் செய்துள்ளது. ஒரு பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததுப் பெரிதாய் விவாதிக்கப்பட்டது. ஆனால், சென்னை ஐ.ஐ.டி. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக இசைக்கப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல் முந்தைய செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஆக, ஒன்றை மறக்கடிக்க, மற்றொரு பரபரப்புச் செய்தியோ, நிகழ்வுகளோ  திட்டமிட்டோ, இயல்பாகவோ தொடர்ந்து வந்து, முந்தைய பரபரப்புகளைப் பின்னுக்குத் தள்ளி விடுவது வாடிக்கையாகி வருகிறது. மறதி மட்டும் எந்தத் திட்டமும் இல்லாமல் தொடர்கதையாக நீடிக்கிறது. இந்த மறதியை மறக்கும் சூழ்நிலை வலுப்பெற்றால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும்!

 

 


டிரெண்டிங் @ விகடன்