வெளியிடப்பட்ட நேரம்: 01:46 (01/03/2018)

கடைசி தொடர்பு:01:46 (01/03/2018)

"வக்பு வாரியத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க" - சந்தேகம் கிளப்பும் சரீப்!

வக்ஃபு வாரியத்தின் தேர்தலை தமிழக அரசு ஒத்திவைத்ததன் பின்னணியில் பாஜக இருக்கிறதோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் கே.எம்.சரீப் கூறியுள்ளார்.

வக்ஃபு வாரியம்


இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கொண்டதொரு அமைப்பு வக்ஃபு வாரியம். கிட்டதட்ட அந்த மக்களின் கோர்ட் போன்ற அமைப்புதான் இது. இந்தியா முழுவதும் உள்ள இந்த வாரியத்தின் தலைமை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும். அந்த மாநிலத்தில் உள்ள வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை பராமரிப்பது, அதன்மூலம் வருகிற வருமானத்தை முறைப்படுத்துவது, பள்ளிவாசல்களை நிர்வகிப்பது, அதுதொடர்பான பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது என்று பல்வேறு விசயங்களை அந்தந்த மாநிலத்தில் அமைந்துள்ள வக்ஃப் வாரியம் தலையிட்டு தீர்த்து வருகிறது. இதன் தலைவர் பதவி என்பது செல்வாக்கு நிரம்பிய, அதிகாரம் கொண்ட பதவியாகும்.  அந்தவகையில்,கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலே நடைபெறாமல் இருந்த தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்குக் கடந்த  ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.எம்.செரிப் என்பவர் காரசாரமாக தமிழக அரசை விமரிசித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருக்கும் அவரைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.

"பல்லாயிரம் கோடிரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃபு வாரியத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தமிழக அரசால் திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். வக்ஃபு வாரியத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைவரும் இல்லை. முழுமையான செயல் அலுவலரும் இல்லை. இதனால் ஏராளமான வக்ஃபு வாரியத்தின் பணிகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. வாரியத் தலைவர் தேர்தல் நடந்து அதற்கென தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் வந்துவிட்டால், முடிக்கப்படாமல் கிடக்கும் நிறைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று இஸ்லாமிய மக்கள் நம்பி இருந்தோம். இந்தநிலையில், தற்போது தேர்தலை தமிழக அரசு தள்ளிவைத்திருக்கிறது. இந்தச் செயல் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. ஆளுங்கட்சியில் நடைபெற்றுவரும் உள்கட்சி மோதல்களாலும், பிரச்சனைகளாலும் இந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களுக்குத்  தகவல்கள் வருகிறது.

நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள், அவற்றிற்கு உண்டான சொத்துக்கள், அவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் இவற்றை தீர்த்துவைப்பதில் வக்ஃபு வாரியம் பெரும்பங்கு வகிக்கிறது. நீதிமன்ற அந்தஸ்துள்ள வக்ஃபு வாரியம் இப்போது இயங்காமல் இருப்பதால், தீர்க்கப்படாத பலநூறு பிரச்சனைகள் வாரியத்தில் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியாக தற்போதைய ஆட்சி செயல்படுவதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வக்ஃபு வாரியத் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எங்களுக்கு எழுப்பியுள்ளது. அதாவது, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும் எழுந்துள்ள அந்த சந்தேகங்களை பொய் என்று நிருபிக்கவாவது  தமிழக அரசு உடனடியாக வக்ஃபு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த வேண்டுகோளை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முன் வைக்கிறேன்" என்றார்.