மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் தகனம் - கண்ணீர் மல்க விடைகொடுத்த மக்கள்! | The body of the student who committed suicide in Chandigarh is cremated in Rameswaram

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (28/02/2018)

கடைசி தொடர்பு:20:44 (28/02/2018)

மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் தகனம் - கண்ணீர் மல்க விடைகொடுத்த மக்கள்!

சண்டிகரில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் ராமேஸ்வரத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

மாணவர் கிருஷ்ண பிரசாத்

ராமேஸ்வரம் திருக்கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வரும் ராமசாமி - புவனேஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் கிருஷ்ணபிரசாத். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்த கிருஷ்ணபிரசாத் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை கல்லூரிக்கு வர வேண்டிய கிருஷ்ணபிரசாத் வராத நிலையில் அவருடன் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்த போது கிருஷ்ணபிரசாத் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த கிருஷ்ணபிரசாத்திற்கு இந்தி மொழி முழுமையாகத் தெரியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அவர் படிப்பினை தொடர விருப்பமில்லாமல் இருந்தாகவும், மனம் அழுத்தத்துடனேயே காணப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இதையடுத்து ராமேஸ்வரத்தில் வசித்து வந்த கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சண்டிகருக்குச் சென்றனர். நேற்று காலை அவர்கள் சண்டிகர் மருத்துவ மனைக்குச் சென்றதை தொடர்ந்து அங்கு கிருஷ்ணபிரசாத்தின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட கிருஷ்ணபிரசாத்தின் உடல் இன்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது. 

ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரின் உடலைக் கண்ட உறவினர்கள், பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரியில் உடன் படித்த மாணவ மாணவிகள் கதறி அழுதனர். இதன் பின் கிருஷ்ணபிரசாத்தின் வீட்டின் முன்பு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கிருஷ்ணபிரசாத்தின் உடலுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட கிருஷ்ணபிரசாத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close