வெளியிடப்பட்ட நேரம்: 02:22 (01/03/2018)

கடைசி தொடர்பு:02:22 (01/03/2018)

கணவனின் கள்ளத் தொடர்பு காரணமாக மனைவி தீ குளிக்க முயற்சி..!

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஒரு பெண் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொள்ள முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள்.

தற்கொலைக்கு முடிவெடுத்த அந்த பெண்ணிடம் பேசியபோது, ''என் பேரு தைலம்மாள். என் கணவர் பேரு விஜயகுமார். நாங்கள் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டோம். எங்களுக்கு 10 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 8 வயதில் விஷ்வல்ராஜ் என்ற மகனும் இருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்தோடு சேலம் தீவட்டிப்பட்டி அருகே கொங்குப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம்.

என் கணவர் விஜயகுமார் தற்போது மினி பஸ் டிரைவராக இருந்து வருகிறார். அவருக்கு சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதையடுத்து என்னை தினந்தோறும் அடித்து சித்தரவதை செய்கிறார். கள்ளக்காதலியை கல்யாணம் செய்துக் கொள்ள என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கொடுமை செய்கிறார்.

என்னுடைய கணவன் எனக்கு தேவையில்லை. என்னுடைய இரண்டு குழந்தைகளையும் பிடித்து வைத்துக் கொண்டார். என்னுடைய குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் குழந்தைகளை என்னிடம் ஒப்படைத்து விட்டால் கண்காணாத இடத்திற்கு போய் விடுகிறேன் என்று பல முறை கெஞ்சிக் கேட்டும் குழந்தைகளை கொடுக்காமல் கொடுமை செய்கிறார். அதனால் தற்கொலை செய்து இறந்து விடலாம் என்று முடிவு செய்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன்'' என்றார்.

இதுப்பற்றி தையம்மாளின் கணவரிடம் தொடர்பு கொண்டோம். அப்போது தைலம்மாளின் மாமியார் மாரியம்மாள் பேசினார், ''என் மகனிடமும் புத்திமதி செல்லிட்டு இருக்கிறேன். ரெண்டு குழந்தைகள் பிறந்த பிறகு எதுக்கு கள்ளக்காதல் என்று திட்டுகிறேன். ஆனால் என் மருமகள் அவனை அன்பால் திருத்தாமல் வாடா, போடா என்று காதில் கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தை பேசுவதால் அவன் தவறான வழிக்கு செல்லுகிறான். குழந்தைகள் என்னிடம் இருக்கிறது. அவள் வந்து கூப்பிட்டு குழந்தைகள் அவளிடம் சென்றால் நாங்க தடுக்க மாட்டோம்'' என்றார்.