வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (01/03/2018)

கடைசி தொடர்பு:17:21 (12/07/2018)

தேர்த் திருவிழா பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்த சைவ விருந்து!

அன்னவாசலில் நேற்று நடந்த கோவில் திருவிழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்கும் அதனைத்தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த பார்வையாளர்களுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் சைவபிரியாணியும் தயிர்சாதமும் வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அருகிலுள்ள அன்னவாசலிலுள்ள கோயிலில் மாசி மக தேர்திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா நேற்றைக்கு முந்தைய நாள் இரவு  நடைபெற்றது. நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாள் குறிக்கப்பட்ட போதே அன்னவாசல் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி  தேர்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் அத்தனை பேர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோவிலுக்கு அருகிலேயே சாலை ஓரத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு பாக்குமட்டை தட்டில் வைத்து சைவ பிரியாணி மற்றும் தயிர்சாதம்  வழங்கினர். 

இதுகுறித்து, அன்னவாசல் ஜமாத் துணை தலைவர் முகமது ரிசா, முகமது உசேன் ஆகியோர் கூறும்போது, "சகோதரத்துவம்,
மத நல்லிணக்கம் என்பது நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளமாக இருந்து வருகிறது. அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்துகிறோம். கடந்த வருடம் ஜல்லிக்கட்டு தடை இருந்தபோது அன்னதானம் கொடுக்கமுடியுமா? என்ற சூழல் இருந்தது. ஆனால், தடை நீக்கப்பட்டு,  ஜல்லிக்கட்டும் கோவில் திருவிழாவும் நடந்தபோது, ரொம்ப விமரிசையாக அன்னதானம் வழங்கினோம். இஸ்லாமியர்கள் என்றாலே பிரியாணி தான், எல்லோருக்கும் நினைவுக்கு வரும். நடப்பது கோவில் திருவிழா என்பதால், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதேசமயம் எங்களது அடையாளமான பிரியாணியையே சமைத்து வழங்கினோம்.

அந்த பிரியாணி முழுக்க முழுக்க சைவ பிரியாணி. இந்த வருடமும் அப்படியே செய்தோம். கோவிலுக்கு வயதானவர்களும் வருகிறார்கள் என்பதால், அவர்கள் உடல்நலனில் அக்கறைக் கொண்டு தயிர் சாதமும் பறிமாறினோம். கந்தூரி விழாக்களில் இந்துக்களும் கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்களும் கலந்துக் கொண்டு மதச்சார்பின்மையை வலுப்படுத்துவது இன்றைக்கு அவசியமாக இருக்கிறது.அதன் வெளிப்பாடுதான் இந்த அன்னதானம் முயற்சி. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, பெரும் மனரீதியில் நிறைவையும் மகிழ்வையும் தருகிறது" என்றார்கள்.