வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/03/2018)

கடைசி தொடர்பு:15:40 (09/07/2018)

அன்னவாசலில் ஜல்லிக்கட்டு கொண்டாட்டம்..!

அன்னவாசலில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் சிலரும் பார்வையாளர்கள் பலருமாக மொத்தம் 29 பேர்கள் காயமடைந்தனர்.

புதுக்கோட்டையை மாவட்டம் அன்னவாசலில் உள்ள கோவிலில் மாசி தேர் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதனைக் காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் ஆரவம் கொண்டவர்கள் ஏராளமாக வருவார்கள். 
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அன்னவாசலில் நேற்று நடைபெற்றது. கடந்த ஒருவாரமாக வாடிவாசல் அமைக்கும் பணி,  பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான கேலரி உள்ளிட்ட பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை வழக்கம்போல், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்த 800 காளைகள் கலந்துக்கொண்டன. 250 மாடுபிடி வீரர்களும் நெஞ்சு விரித்துக் காளைகளை அடக்கக் காத்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்களும் மாடுபிடி வீரர்களை மருத்துவர்களும் பரி சோதனை செய்தனர். பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், சீறிப்பாய்ந்த காளைகளுக்கு ஆதரவாக பார்வையாளர் பகுதியிலிருந்து விசில் சத்தம் பறந்தது. தாங்களும் அதுபோன்ற விசில் வாழ்த்துகளை அள்ள வேண்டும், பரிசுகளைக் குவிக்க வேண்டும் என்று வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு  காளைகளை அடக்கினர. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பிளாஸ்டிக் சேர், குடம், பேன், குக்கர், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள்  11 பேரும் பார்வையாளர்கள் 18 பேரும் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் 8 நபர்கள்  மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலும் இலுப்பூர் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோ.பாலசந்திரன் முன்னிலையிலும்  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.