கருகும் நெல் பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிடுங்கள் - தூத்துக்குடியில் ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீருடன் மனு

குளங்களில் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நெல் பயிர்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுத்து மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெண்கள், விவசாயிகள் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். 

துாத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. இந்த வருடம் பெய்த பருவமழை நீரைப் பயன்படுத்தி மாவட்டத்தில்  பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில்  நெல் பயிர் அறுவடைக்கு வரும் நிலையில் இருக்கிறது.  இந்த நிலையில், தாமிரபரணி பாசனத்தில் உள்ள மருதுார் மேலக்கால் பாசனப்பகுதியின் தென்கரைகுளம் மற்றும் அதன் கீழ்உள்ள நொச்சிகுளம், கீழப்புதுகுளம், முதலைமொழிகுளம், வெள்ளரிகாய் குளம், தேமாங்குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் இல்லை. இதனால்,  இதன் மூலம் பாசம்  பெற்று வந்த 3,722 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள நெல் பயிர்கள் கருகும் அபாயத்தில் இருப்பதாக கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலேயே விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.  

இந்த பயிர்களை உடனடியாகக் காப்பாற்ற, பாபநாசம் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க பெண்களும், விவசாயிகளும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் கோரிக்கை பதாகையை காட்டி கேட்டுக் கொண்டு மனு அளித்தனர். இந்நிகழ்வு அனைவரையும் செகிழ்ச்சி அடைய வைத்தது. ஆட்சியர் வெங்கடேஷும் நெகிழ்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்காக 1,040 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலியின் கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு துாத்துக்குடிக்கு அனுப்பபடுகிறது. இவ்வாறு வரும் தண்ணீர் தாதன்குளம் அருகில், சிலரால் சட்ட விரோதமாக திருப்பி வேறு இடங்களுக்கு விடப்படுவதாகவும் இதனால்தான் தங்கள் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை எனவும் விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் கூறினர். உடனே, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்த ஆட்சியர், “சட்டவிரோதமாக தண்ணீரை திருப்பிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் அரவைமில் உரிமையாளர்கள் நெல்லை கோட்டை கணக்கில் எடுத்துக் கொள்வதால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கோட்டை கணக்கு என எடுத்துக் கொள்ளாமல் கிலோ கணக்கில் நெல் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!