வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (01/03/2018)

கடைசி தொடர்பு:09:15 (01/03/2018)

காப்பகத்திலிருந்த அனைத்து முதியோர்களும் வெளியேற்றம்! அடுத்தகட்ட நடவடிக்கை எப்போது?

பாலேஸ்வரத்தில் இயங்கிவந்த முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த முதியோர்கள் மீட்கப்பட்டு வேறு அரசு உதவிபெறும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இருப்பவர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டதால் அந்தக் காப்பகம் காலியாகி இருக்கிறது.

உத்திரமேரூர் முதியோர் இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தொடர் சர்ச்சை காரணமாக அங்கிருக்கும் முதியோர்களை அரசு உதவிபெறும் வேறு இல்லங்களுக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர், மருத்துவக்குழுவினர், சமூகநலத் துறையினர், காவல்துறையினர் என அதிகாரிகள் அங்கு தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 26-ம் தேதி 58 பேர், 27-ம் தேதி 128 பேர் என அருகில் உள்ள காப்பகங்களுக்கு மாற்றும் பணி தொடர்ந்தது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 96 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மற்ற காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை காப்பகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடத்தைப் பார்வையிட்டார். காப்பகத்தில் எஞ்சி இருந்த 9 குழந்தைகள் பற்றிய விவரங்கள் குறித்துக் காப்பக பொறுப்பாளர் தாமஸிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் பற்றிய விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு தாமஸிடம் கேட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்தக் கருணை இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பிணவறைகளை சோதனையிட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க