வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (01/03/2018)

கடைசி தொடர்பு:10:05 (01/03/2018)

அரசுப் பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய அறிவியல் தினம்!

     

 

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் முகமூடிகளை அணிந்து அசத்தினர்.

இந்திய விஞ்ஞானி சர்.சி.வி ராமன் பிப்ரவரி 28-ம் தேதி ராமன் விளைவைக் கண்டுபிடித்தார். அந்த நாளை நினைவு கூரும் வண்ணம்,கரூர் மாவட்டம்,வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 28.02.2018 தேசிய அறிவியல் தினத்தை அப்துல்கலாம் துளிர் இல்லம் மற்றும் இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்கள் மூலம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 நிகழ்வின் தொடக்கமாக,'கலை வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே' என்ற தலைப்பில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களிடையே கட்டுரைப் போட்டியும்,சர்.சி.வி ராமன் படம் வரைந்து ஓவியப் போட்டியாகவும் நடத்தப்பட்டது. மாலை சர்.சி.வி ராமன் முகமுடி அணிந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,பிளாஸ்டிக் பாட்டில் வைத்து வீட்டுச் சுவர் அமைத்தல்,ராமன் விளைவு,நியூட்டன் சோதனை,வளிமண்டல அழுத்தம்,காது கேளாதவர்களுக்கான ஒலி கேட்கும் கருவி ஆகிய  அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். நிறைவு விழாவில்,பள்ளி கட்டடக்குழுத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ராமநாதன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தமிழரசன் முன்னிலை வகித்தார்.


 

ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் பள்ளி முன்னாள் இளம் விஞ்ஞானி மாணவர் பொ.ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராமன் விளைவு பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார். 

 மாணவர்களின் வழிகாட்டுதல் ஆசிரியர் தனபால்,  "எங்கள் பள்ளி மாணவர்களில் 290- க்கும் மேற்பட்டவர்களைப் பல்வேறு வகையில் மாணவ விஞ்ஞானிகளாகப் பதிவு செய்ய வைத்திருக்கிறோம். அவர்களை இன்னும் உத்வேகப்படுத்தும்விதமாக இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் முகமூடிகளை அணிந்து மாணவர்களை தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாட வைத்தோம். இதன்மூலம்,சர்.சி.வி.ராமன் செய்த அளப்பறிய அறிவியல் சாதனைகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்" என்றார் பூரிப்பாக!.