திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்! - 'அரோகரா' கோஷத்துடன் வலம் வந்தது தேர்! | Masi festival at thiruchendur

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (01/03/2018)

கடைசி தொடர்பு:11:06 (01/03/2018)

திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்! - 'அரோகரா' கோஷத்துடன் வலம் வந்தது தேர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேரோட்டம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர். இது, கடற்கரை ஓரம் வீற்றிருப்பது இதன் சிறப்பாகும். வருடம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் மாசிப் பெருந்திருவிழாவும் ஒன்று. யானை மீது கொடிப்பட்டம் எடுத்துவரப்பட்டு கடந்த 20-ம் தேதி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நாள்களில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. அத்துடன் காலை, மாலை சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் முத்துக்கிடா, அன்னம், தங்கமயில், வெள்ளித்தேர், வெற்றிவேர், வெள்ளிக்குதிரை ஆகிய பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி ஆகிய திருக்கோலங்களில் ரத வீதிகளில் வலம் வருதல் வைபவமும் நடைபெற்று வருகிறது. 

தேரோட்டம்

திருவிழாவின் 10-ம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தோரோட்டம் காலை கும்ப லக்னத்தில் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உதய மார்த்தாண்ட தீபாராதனை ஆகியவை நடந்தது. பின், சுவாமி, அம்பாள் திருத்தேருக்குப் புறப்பாடு நடைபெற்றது. விநாயகர், உற்சவர் சுவாமி குமாரவிடங்க பெருமாள், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனித் தேர்களில் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோயில் யானை தெய்வானை முன் செல்ல.. பஞ்ச வாத்தியங்கள், மேளதாளம் முழங்க “கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..”, “வேல்.. வேல்.. வெற்றி வேல்..”,  ”யார் வாரார் வீதியிலே.. சுவாமி வரார் வீதியிலே...”, யார் வாரார் வீதியிலே.. அம்பாள் வராள் வீதியிலே..”  என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளில் சுற்றி நிலையை அடைந்தது திருத்தேர். 

masi festival devotees

நாளை மார்ச் 2-ம் தேதி 11-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இரவில் தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வரும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.  நாளை மறுநாள், மார்ச் 3-ம் தேதி 12-ம் நாள் திருவிழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close