மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஒரு மணி நேரத்தில் நிறைவேற்றிய பொறுப்பு கலெக்டர்!


       மாற்றுத்திறனாளிகள்- பொறுப்பு கலெக்டர்

மனுக்கள் பெறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி சபாஷ் வாங்கியிருக்கிறார் கரூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ்.

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. வழங்கப்பட்ட மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 3 பயனாளிகளுக்குக் காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக்கருவியும்,1 பயனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியும் உடனடியாக வழங்கப்பட்டது. இம்முகாமில் சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாத உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டுமனை பட்டா என மொத்தம் 40 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை 4 பயனாளிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 10 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.18 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை சூர்யபிரகாஷ் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர்,  "இந்தச் சிறப்பு முகாமானது இனி வரும் காலங்களில் மாதந்தோறும் நடைபெறும். வாழ்வில் கசப்புகளை மட்டுமே எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பலன் பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்படும். அவர்கள் கொடுக்கும் மனுக்களை காலதாமதப்படுத்தாமல் உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். கரூர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ எப்போதும் காத்திருக்கிறது"  எனத் தெரிவித்தார்.
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!