வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (01/03/2018)

கடைசி தொடர்பு:13:48 (01/03/2018)

ஒரே ஆண்டில் 319 பேர் மரணம்! கருணை இல்லத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கருணை இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த கருணை இல்லத்தில் இருந்து முதியோர்கள் கடத்தப்படுவதாகவும் இறந்தவர்களின் எலும்புகளை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதே பாணியில் திண்டுக்கல்லிலும் ஒரு கருணை இல்லம் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கருணை இல்லம்
 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மெட்டூர் பகுதியில் சிறுமலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது புனித ஜோசப் ஹாஸ்பீசஸ் என்ற கருணை இல்லம். 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கருணை இல்லத்தில் பராமரிப்பு இல்லாத முதியோர்கள், சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தக் கருணை இல்லம் மீதும் சந்தேகப் பார்வை படியத்தொடங்கியுள்ளது. பாலேஸ்வரத்தில் இருந்தது போலவே இங்கும், இறந்தவர்களின் உடல்களை அடுக்கி வைக்க இரண்டு அடுக்கு கட்டடம் அமைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தக் கருணை இல்லத்தில் வருவாய் ஆய்வாளர் செல்வி தலைமையில் சில அதிகாரிகள் முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டனர். 50 நபர்கள் மட்டுமே தங்குவதற்கு இடமுள்ள கட்டடத்தில் 231 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் 119 பேர் பெண்கள். ஆதரவற்றவர்களான இவர்களை ஷெட்கள் அமைத்து தங்க வைத்திருக்கிறார்கள். இங்கு இறப்பவர்களை புதைப்பதோ எரிப்பதோ இல்லை. 15 அடி உயரம் கொண்ட இரட்டை அடுக்கு கட்டடத்தில் இறந்த உடல்களை வைத்துவிடுகிறார்கள். உடல் அழுகி, கீழ் அடுக்கில் விழுந்த பின்பு, எலும்புகள் மட்டுமே மேல் அடுக்கில் மிஞ்சும். அந்த எலும்புகளை விற்பனை செய்கிறார்களா என்ற ரீதியில் அதிகாரிகள் விசாரித்தனர். கடந்த ஆண்டு மட்டும் இந்த இல்லத்தில் 319 நபர்கள் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 நபர்களும் பிப்ரவரி மாதம் 23 நபர்களும் இறந்திருப்பதாகப் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருணை இல்லம் 

இந்நிலையில், விரிவான விசாரணை நடத்துமாறு திண்டுக்கல் கலெக்டர் வினய் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தை நல அதிகாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். விருப்பமுள்ளவர்களை அவர்கள் வீடுகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணை இல்லம்

இறந்தவர்களின் விவரங்கள், இறப்புச் சான்றிதழ்கள் ஆகியவை பற்றியும் விசாரித்து வருகிறார்கள். விசாரணை தொடர்பான முழுமையான அறிவிக்கை தாக்கலானவுடன், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எங்கள் இல்லத்தில் தவறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். யாரும் எங்கள்மீது எவ்விதமான புகாரும் தெரிவிக்கவில்லை’ எனக் கருணை இல்லம் தரப்பு தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க